செய்திகள்
அவிநாசி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி.

அவிநாசி ஊராட்சி பள்ளிக்கு அதிகரிக்கும் மவுசு

Published On 2021-07-12 09:35 GMT   |   Update On 2021-07-12 09:35 GMT
ஊரடங்கால் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ள பெற்றோர் அரசு பள்ளிகளை நாடுகின்றனர்.
அவநாசி:

ஊரடங்கால் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ள பெற்றோர் அரசு பள்ளிகளை நாடுகின்றனர். 

அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் கடந்த 2016ல் மாணவர் எண்ணிக்கை 40-ஆக சரிந்தது. அதன்பின் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்களின் முயற்சி, தன்னார்வ அமைப்பினரின் ஒத்துழைப்பு, ஆங்கில வழிக்கல்வி போன்ற காரணங்களால் மாணவர் எண்ணிக்கை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. நான்கு வகுப்பறை கொண்ட இப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை 240 ஆக இருந்தது. கூடுதலாக, நான்கு வகுப்பறை கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி மாணவர் எண்ணிக்கை 280 ஆக அதிகரித்ததால், ‘ஹவுஸ்புல்’ சொல்ல வேண்டிய நிலை பள்ளி நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமையாசிரியை சிவகாமி கூறுகையில்:

நகரின் மத்தியில் இருப்பதாலும் ஆங்கில வழிக்கல்வி போதிக்கப்படுவதாலும் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விரும்புகின்றனர். ஊரடங்கால் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ள பெற்றோர் அரசு பள்ளிகளை நாடுகின்றனர். பள்ளியின் வளர்ச்சிக்கு ஆசிரியர்களின் ஒத்துழைப்பும், அயராத உழைப்பும் தான் காரணம் என்றார்.

வட்டார கல்வி அலுவலர் ஜஸ்டின்ராஜ் கூறுகையில், பள்ளியில் உள்ள 8 வகுப்பறையில் அதிகபட்சம் 280 மாணவர்களை மட்டுமே சேர்க்க முடியும். ஒரு தலைமை ஆசிரியை, 2 நிரந்தர ஆசிரியர்கள், மாற்றுப்பணி அடிப்படையில் 2 ஆசிரியர்கள் உள்ளனர். கூடுதலாக மூன்று ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
Tags:    

Similar News