செய்திகள்
கைது

மீஞ்சூர் அருகே ரூ.1½ கோடி குட்கா சிக்கியது- 4 பேர் கைது

Published On 2021-07-09 09:38 GMT   |   Update On 2021-07-09 09:38 GMT
கண்டெய்னர் லாரிகள் மூலம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்றவற்றை கடத்தி செல்வதாக சென்னை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மீஞ்சூர்:

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த மேலூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான லாரிகள் நிறுத்தும் இடம் உள்ளது. இங்கிருந்து நாள்தோறும் லாரிகள் வெளியிடங்களுக்கு செல்கிறது. இந்த நிலையில் கண்டெய்னர் லாரிகள் மூலம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்றவற்றை கடத்தி செல்வதாக சென்னை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு மீஞ்சூர் பகுதியில் உள்ள லாரி நிறுத்தும் இடங்களை சோதனை செய்தனர். மேலூர் கிராமத்தில் தனியார் லாரி நிறுத்தும் இடத்தில் போதை தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கன்டெய்னர் லாரியில் இருந்து பண்டல்கள் அடுக்கிய பெட்டிகள் இதர வாகனங்களில் ஏற்றுவது கண்டுபிடிக்கப்பட்டது. கன்டெய்னர் லாரி உள்பட 6 வாகனங்களையும் ரூ.1½ கோடி மதிப்பிலான 16 டன் குட்காவையும் போலீசார் கைப்பற்றினர்.

குட்கா கடத்தும் கும்பலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் தேவம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜி (37), சென்னை துரைப்பாக்கம் மூட்டைக்காரன்சாவடி தெருவை சார்ந்த கர்ணன் (35). கும்மிடிப்பூண்டி பெரிய நத்தம் மங்காபுரம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் (38), தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சேவல்பட்டி அருண்குமரன் (24) என்பதும், இவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்து சென்னை புறநகர் பகுதி, மீஞ்சூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆந்திர மாநிலத்துக்கு கடத்தி சென்று விற்பனைக்கு அனுப்ப இருந்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட 4 பேரை மீஞ்சூர் போலீசில் ஒப்படைத்தனர். தகவலறிந்த திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்குமார் நேரில் வந்து 6 வாகனங்களில் இருந்த குட்கா பொருட்களை பார்வையிட்டார் இதை தொடர்ந்து போலீசார் ராஜி, கர்ணன், ராஜசேகர், அருண்குமரன் ஆகியோரை பொன்னேரி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News