செய்திகள்
திருமாவளவன்

நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் - அரசுக்கு, திருமாவளவன் ஆலோசனை

Published On 2021-06-24 13:07 GMT   |   Update On 2021-06-24 14:20 GMT
எம்.பி.பி.எஸ். இடங்களில் 15 சதவீதம், முதுநிலை மருத்துவப்படிப்பு இடங்களில் 50 சதவீதம், சிறப்புப் படிப்புகளில் 100 சதவீதம் இடங்களை தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளிலிருந்து மத்திய தொகுப்புக்கு அளித்து வருகிறோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளது.

சென்னை:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கல்வி என்பது தற்போது அரசியலமைப்புச் சட்டத்தின் பொது அதிகாரப்பட்டியலில் உள்ளதால் நீட் தேர்வை ரத்து செய்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றுவதற்கு அதிகாரம் உள்ளது.

ஆனால், பொதுப்பட்டியலில் உள்ள ஒரு பொருள் தொடர்பாக மாநில சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டத்தின் அதே பொருள் தொடர்பாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தின்மூலம் ஒரு சட்டத்தை இயற்றுமெனில் ஒன்றிய அரசு இயற்றும் சட்டமே செல்லுபடியாகும் என அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 254-ன் உட்பிரிவு 1 கூறுகிறது.

ஆனால்,உட்பிரிவு 2-ல் அதற்கு ஒரு விதிவிலக்கைத் தந்திருக்கிறார்கள். “பொதுப்பட்டியலில் உள்ள ஒரு பொருள் தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றியதன் பிறகு அதே பொருள் தொடர்பாக மாநில அரசு சட்டம் ஒன்றை இயற்றி அது குடியரசுத் தலைவரின் ஒப்பு தலைப்பெற்றுவிட்டால் அந்த மாநிலத்தில் அந்த சட்டம் செல்லுபடியாகும்” என விளக்கம் அளித்துள்ளனர்.

நீட் தேர்வுக்காக தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2017-ம் ஆண்டு நீட் தேர்வுக்கு எதிராக இயற்றப்பட்ட இரண்டு சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காமல் நிராகரித்துவிட்ட நிலையில் மீண்டும் சட்டம் இயற்றினாலும் டெல்லியில் பா.ஜ.க. அரசு தொடர்வதால் அதே நிலைதான் ஏற்படும்.

எனவே, பின்வரும் ஆலோசனைகளை எமது கட்சியின் சார்பில் முன்வைக்கிறோம்.


* நீட் தேர்வு முற்றாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்தில்லை. ஆனால், அதை ஒன்றிய அரசு தான் செய்ய முடியும் என்ற நிலையில் அதற்கான தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாடு அரசு அழுத்தம் தர வேண்டும். நாடாளுமன்றத்தில் அதற்காகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒருக்கிணைந்து போராட தமிழ்நாடு அரசு முன்முயற்சி எடுக்கவேண்டும்.

நீட் தேர்வு மாநில உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது.எனவே தமிழ்நாடு அரசு நீட் தேர்வை ரத்துசெய்யவேண்டும் என்ற தனது நிலைப்பாட்டுக்கு ஆதரவாகப் பிற மாநில அரசுகளின் ஆதரவைத் திரட்ட வேண்டும். அதற்காக பா.ஜ.க. அல்லாத மாநில முதல்-அமைச்சர்களின் கூட்டம் ஒன்றைத் தமிழ் நாடு முதல்-அமைச்சர் உடனடியாகக் கூட்ட வேண்டும் என இந்த ஆணையம் பரிந்துரை செய்யவேண்டும்.

* தற்போது எம்.பி.பி.எஸ். இடங்களில் 15 சதவீதம், முதுநிலை மருத்துவப்படிப்பு இடங்களில் 50 சதவீதம், சிறப்புப் படிப்புகளில் 100 சதவீதம் இடங்களை தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளிலிருந்து மத்திய தொகுப்புக்கு அளித்து வருகிறோம். அதை உடனடியாக நிறுத்தவேண்டும்.

* நீட் போன்ற நுழைவுத் தேர்வை பிற பட்டப்படிப்புகளுக்குக் கொண்டு வருவதற்கான ஒன்றிய அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்தவேண்டும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News