செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறும் ஸ்டாலினின் டெல்லி பயணம்

Published On 2021-06-16 08:15 GMT   |   Update On 2021-06-16 08:15 GMT
முதல்- அமைச்சராக பதவி ஏற்றவர்கள் பிரதமரை சந்திப்பது வாடிக்கைதான் என்றாலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

சென்னை:

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியை எதிர்த்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தேர்தலின் போது தி.மு.க. பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழர் நலன் முழுமையாக காக்கப்படும் என்று   மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

நீட் தேர்வு ரத்து, பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வது, தமிழுக்கு முக்கியத்துவம் அளிப்பது, தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களை விரைவாக கொண்டு வருவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் தி.மு.க. உறுதியாக இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டது.

எனவே தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மத்திய அரசுடன் மோதல் போக்கு நீடிக்குமா? என்று அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

தி.மு.க. வெற்றியை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சராக கடந்த மே மாதம் 7-ந் தேதி பதவி ஏற்றார். அப்போது கொரோனா பரவல் ஏறுமுகமாக இருந்தது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் முதல்வரும், அமைச்சர்களும் தீவிரமாக இறங்கினார்கள்.

இந்த காலகட்டத்தில் ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதியை அதிகரிப்பது, ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி தேவைக்கு ஏற்ப கிடைக்காதது, பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தமிழகத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் பெறுவது போன்ற பல்வேறு சிக்கல்கள் எழுந்தது.

இதற்காக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். மத்திய அரசிடம் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். மருத்துவ ஆக்சிஜன், தடுப்பூசி, மருத்துவ தேவை பற்றி பிரதமர் மோடிக்கு கடிதங்கள் எழுதினார். இதன் மூலம் தமிழக அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுத்தது.

செங்கல்பட்டில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் உற்பத்தி நிலையத்தை தொடங்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் தடுப்பூசியை மாநிலங்களுக்கு மத்திய அரசு இலவசமாக வழங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதை மு.க.ஸ்டாலின் வரவேற்றார். பாராட்டும் தெரிவித்தார்.

இந்தநிலையில் கொரோனா பரவலை தொடர்ந்து மாணவர்கள் நலன் கருதி சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.

இதை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பிளஸ்-2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு   மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.


பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டிய நிலையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போடுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். எனவே மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். பூஞ்சை நோய் மருந்தை அதிகரிக்கும்படி கேட்கிறார்.

இதையும் படியுங்கள்... பிரதமர் மோடியுடன் மு.க.ஸ்டாலின் 17-ந்தேதி சந்திப்பு

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறார். தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு அதிக நிதி தேவைப்படுகிறது. எனவே மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்த திட்டமிட்டுள்ளார்.

தனது கோரிக்கைகளுக்கு மத்திய அரசு உதவ வேண்டிய அவசியம் குறித்து விரிவான அறிக்கையையும் பிரதமரிடம் கொடுக்கிறார்.

முதல்- அமைச்சராக பதவி ஏற்றவர்கள் பிரதமரை சந்திப்பது வாடிக்கைதான் என்றாலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால் தான் தமிழத்துக்கு தேவையான உதவிகளை பெற முடியும் என்பதால் பிரதமரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கை முக்கியமாக கருதப்படுகிறது. இது தவிர அ.தி.மு.க. ஆட்சியின் போது நடந்த ஊழல் பற்றிய விவரங்களையும் பிரதமரிடம் கொடுக்க மு.க.ஸ்டாலின் முடிவு செய்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமரை சந்திப்பது மூலம் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க விரும்பும் மு.க.ஸ்டாலின், பா.ஜனதாவின் தலைவர்களுடனும் இணக்கமாக நடந்து கொள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்தித்து தமிழகத்தின் நிலவரங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறார். இதுவும் முக்கியத்துவம் பெறுகிறது.

மத்திய அரசின் முக்கிய தலைவர்கள் தவிர தி.மு.க.வின் முக்கிய கூட்டணி கட்சியான காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கிறார். அப்போது எதிர்கால தேசிய அரசியல் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் தவிர காங்கிரசின் முக்கிய நிர்வாகிகளையும் மு.க.ஸ்டாலின் சந்திக்க வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற தேர்தலில் பலமான எதிர்க்கட்சிகளை கொண்ட கூட்டணியை உருவாக்க இப்போதே திட்டம் வகுக்கப்படுவதாக கூறப்படுகிறது. சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களும் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மு.க.ஸ்டாலின் டெல்லி பயணமும் இதற்கு அடித்தளம் அமைக்கும் என்று தி.மு.க. முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். எனவே மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறும் என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News