செய்திகள்
மத்திய அரசு

தமிழக அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை: மத்திய அரசு குற்றச்சாட்டு

Published On 2021-06-04 01:50 GMT   |   Update On 2021-06-04 01:50 GMT
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 32 மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் இந்த திட்டத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை.
சென்னை :

மத்திய அரசின் பிரதமர் கரீப் கல்யாண் அன்னயோஜனா மற்றும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்ட செயல்பாடுகள் பற்றி காணொலி காட்சி மூலம் மத்திய உணவு மற்றும் பொது வினியோக திட்டத்துறையின் செயலாளர் சுதன்ஷு பாண்டே நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா பரவல் சூழ்நிலையில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயனடையும் மக்களில், அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரும் பயனடைவதை மாநில அரசுகள் உறுதி செய்வது அவசியமாகிறது.

இதை கருத்தில் கொண்டு நகர மற்றும் ஊரகப்பகுதிகளில் வாழும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிரிவினரை கண்டறிந்து, அவர்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்ட ரேஷன் கார்டுகளை வழங்குவதற்கான சிறப்பு திட்டத்தை மேற்கொள்ளும்படி அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தெருக்களில் வசிப்பவர்கள், குப்பைகளை சேகரிப்பவர்கள், தெருத்தெருவாக சென்று பொருட்களை விற்பவர்கள், சைக்கிள் ரிக்‌ஷா இழுப்பவர்கள் போன்றவர்களை கண்டறியும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயனடையும் தனிநபர்களையும், குடும்பங்களையும் கண்டறிவது, ரேஷன் கார்டுகளை வினியோகம் செய்வது ஆகிய பொறுப்புகள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம்தான் உள்ளன.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 32 மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதன மூலம் மாதம் ஒன்றுக்கு இந்தியா முழுவதும் 1.35 கோடி மக்கள் பயனடைகின்றனர்.

பீகார், ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், கேரளா, கர்நாடகா, அாியானா, மராட்டியம், மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் தமிழகத்தில் இந்த திட்டத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. எனவே இந்த திட்டத்தை நன்றாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழக உணவுத்துறை அதிகாரிகளை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம்.
Tags:    

Similar News