செய்திகள்
தலைமை செயலாளர் இறையன்பு

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆஸ்பத்திரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை- தலைமை செயலாளர் எச்சரிக்கை

Published On 2021-05-19 02:33 GMT   |   Update On 2021-05-19 02:33 GMT
ஒரு சில அரசு அதிகாரிகள், தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் வணிக நிறுவனங்களைச் சேர்ந்த சிலர் மேற்கொள்ளும் சட்டத்துக்கு புறம்பான மனிதாபிமானமற்ற செயல்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு வரப்பெற்றுள்ளது.
சென்னை:

தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக கொரோனா பெருந்தொற்று இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த நம் மாநிலத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் பரவாமல் தடுத்தல், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் காத்தல் ஆகிய 2 முக்கிய இலக்குகளோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

மருத்துவ நெருக்கடி, மனநல பாதிப்பு, நிதி நெருக்கடி ஆகிய மூன்றும் நாட்டையும், நாட்டு மக்களையும் ஒன்றுசேர்ந்து தாக்குதல் நடத்தும் இந்த நேரத்தில் ஒரு சில அரசு அதிகாரிகள், தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் வணிக நிறுவனங்களைச் சேர்ந்த சிலர் மேற்கொள்ளும் சட்டத்துக்கு புறம்பான மனிதாபிமானமற்ற செயல்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு வரப்பெற்றுள்ளது. அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.



இதன் அடிப்படையில் ஆஸ்பத்திரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, அரசின் இலவச சேவைகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களிடம் கையூட்டு பெறுவது போன்ற மனிதநேயமற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.

தவறு செய்யும் அதிகாரிகள் மீது பணிநீக்கம் உள்பட துறை ரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேற்கண்ட செயல்கள் குறித்து உடனடியாக தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசு துறை செயலர்கள், துறையின் தலைவர்கள் மற்றும் காவல்துறையின் லஞ்ச ஒழிப்பு பிரிவு ஆகியோருக்கு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

எந்தநிலையில் உள்ள அதிகாரியாக இருந்தாலும் அல்லது எந்த நிறுவனமாக இருந்தாலும் புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, தவறு நடக்கக்கூடிய இடங்களில் கண்காணிப்பு பணியையும் தீவிரப்படுத்த அறிவுரை வழங்கப்படுகிறது.

மக்களின் உயிர் காக்கும் பணியில் முழு முனைப்போடு ஈடுபட்டு வரும் அரசுக்கு, தவறு செய்யும் ஒருசிலரால் அவப்பெயர் ஏற்படாமல் கவனமாகவும், நேர்மையாகவும், கண்ணியமாகவும் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News