search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமை செயலாளர்"

    • வேலை இல்லை ஊதியம் இல்லை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஊதியம் அவர்களுக்கு உரிமை இல்லை.
    • அரசு ஊழியர்கள் எவரேனும் அலுவலகத்திற்கு வரவில்லை என்றால் அவர்கள் இல்லாத காலமாக கருதப்படும்.

    ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வருகிற 26-ந்தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நேற்று தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அமைச்சர் எ.வ. வேலு அலுவலகத்தில் நேற்று மதியம் அரசு சார்பில் ஜாக்டோ ஜியோ அமைப்பு உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தெரியவில்லை. இந்த நிலையில் 26-ந்தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ள நிலையில், அடையாள வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் அனைத்து துறை செயலாளர்களுக்கும் அவர் எழுதியுள்ள அவசர கடிதத்தில் "அனைத்து துறையின் அரசு ஊழியர்கள் விதிகளை மீறக் கூடாது என்று வலியுறுத்த வேண்டும். அரசு ஊழியர்கள் எவரேனும் அலுவலகத்திற்கு வரவில்லை என்றால் அவர்கள் இல்லாத காலமாக கருதப்படும்.

    வேலை இல்லை ஊதியம் இல்லை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஊதியம் மற்றும் படிகளுக்கு அவர்களுக்கு உரிமை இல்லை. பகுதி நேர பணியாளர்கள், தினசரி ஊதியம் மற்றும் ஒருங்கிணைந்த ஊதியத்தில் இருப்பவர்கள் சேவையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.

    நடத்தை விதிகள் 1973-ஐ யாரும் மீறவில்லை என்பதை உறுதி செய்வதோடு பணியில் இல்லாத காரணத்திற்காக உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    சாதாரண விடுப்பு, மருத்துவ விடுப்பு தவிர வேறு ஏதேனும் விடுப்புக்கான விண்ணப்பம் வேலை நிறுத்த நாளில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஊழியர்களின் வருகை நிலை குறித்த அறிக்கையை 15-ம்தேதி காலை 10.15 மணிக்குள் மனித வள மேலாண்மை துறைக்கு தெரிவிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 49,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
    • கன்னியாகுமரி, தென்காசியில் அனைத்து நியாய விலைக்கடைகளும் செயல்படத் தொடங்கியுள்ளன.

    தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள மீட்பு நடவடிக்கைகள் குறித்து இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கம் அளித்தார்.

    அப்போத அவர் பேசியதாவது:-

    தென் தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப்பணிகள் நிறைவடைந்துள்ளது. மீட்புப்பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர், மாநில பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். தென் மாவட்டங்களில் 3,400 பேர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.

    வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 49,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அனைத்து பகுதிகளிலும் சமுதாய சமையல் கூடங்கள் மூலம் உணவு தயாரித்து வழங்குகிறோம். இதுவரை 5 லட்சம் உணவு பொட்டலங்கள் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளன.

    மழை, வெள்ளத்தால் தென் மாவட்டங்களில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 3,500 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன.

    தென் மாவட்டங்களில் பால் விநியோகம் சீராகி உள்ளது. தென் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமான தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி, தென்காசியில் அனைத்து நியாய விலைக்கடைகளும் செயல்படத் தொடங்கியுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வீடுகளுக்குள்ளும், சுற்றுப்புறத்திலும் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்த வேண்டும்.
    • மழை வெள்ள பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கான்கிரீட் வீடுகளை அமைத்து தர வேண்டும்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அதிலும் காயல்பட்டினம் முழுவதுமாக பாதிக்கப்பட்டு தனித்தீவாக காட்சியளிக்கிறது.

    இது சம்பந்தமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முகம்மது அபூபக்கர் தலைமையில் மாநில செயலாளர் காயல் மகபூப், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை செயலாளர் நவாஸ் அகமது, மில்லி கவுன்சில் நிர்வாகி இபுனு சவூது ஆகியோர் தமிழக அரசின் தலைமைச் செயலாளரான சிவ்தாஸ் மீனா, முதல்-அமைச்சரின் செயலாளர் முருகானந்தன் ஆகியோரை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    காயல்பட்டினம் நகர் முழுவதுமே வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வரும் நிலையில் பொதுநல அமைப்புகளின் மூலம் இயன்ற அளவு மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியையும் செய்து அரசு சார்பில் போர்க்கால அடிப்படையிலான மீட்பு பணிகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    இதன்படி நகரில் உடனடியாக மின்விநியோகத்தை வழங்கவும், அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செல்போன் மற்றும் இன்டர்நெட் சேவையை தொடர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் வீடுகளுக்குள்ளும், சுற்றுப்புறத்திலும் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண தொகையை வழங்கவும், ஆவின் பால் தடையின்றி கிடைக்கவும், ஆண்டுதோறும் நிகழும் மழை வெள்ள பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கான்கிரீட் வீடுகளை அமைத்து தர வேண்டும். கிடப்பில் உள்ள மழை நீர் வடிகால் திட்டத்திற்கு உடனடியாக செயல் வடிவம் கொடுக்கவும், சிறிய அளவு மழை பெய்தால் கூட வரண்டியவேல் விலக்கு அருகில் உள்ள பாலம் தண்ணீரால் மூழ்கடிக்கப்பட்டு தூத்துக்குடி-திருச்செந்தூர் இடையே போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டு விடுவதால் குறிப்பிட்ட அந்த பாலத்தை உயர்த்தி அமைக்கும் பணியை உடனே மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இதனை தொடர்ந்து காயல்பட்டினத்திற்கு ஆவின் பால் விநியோகத்தை தொடரவும், உப மின்நிலையத்தில் ஏற்பட்டுள்ள பழுதை விரைந்து சீரமைக்கவும், காயல்பட்டினத்தில் மீட்பு பணி மற்றும் நிவாரண பணிகளை விரைந்து செயல்படுத்த சிறப்பு அதிகாரியை நியமித்தும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உடனடியாக உத்தரவிட்டார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் 43 தீயணைப்பு நிலையங்களில் உள்ள வீரர்கள் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
    • அதிகம் காற்று வீசும்போது மட்டும் உயர்மின் அழுத்தம் கொண்ட இடங்களில் கட்டாயம் மின் சப்ளை நிறுத்தப்படும்.

    சென்னை:

    தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மயிலாப்பூரில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் இன்று ஆய்வு செய்தார். பேரிடர் மீட்பு பணிக்காக தயார் நிலையில் உள்ள தளவாடங்களை அவர் பார்வையிட்டார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 2 ஆண்டுகளில் மழை நீர் வடிகால் பணிகள் பல பகுதிகளில் சரி செய்யப்பட்ட காரணத்தால் மழைநீர் தேங்கினாலும் சில மணி நேரங்களில் வடிந்து விடுகிறது. ஒருசில பகுதிகளை தவிர மற்ற இடங்களில் பெரிய பாதிப்பு இல்லை.

    கடந்த 3 நாட்களாக பெய்த மழையின்போது சென்னையில் தண்ணீர் தேங்கிய 150 இடங்களை அடையாளம் கண்டுள்ளோம். அந்த பகுதியில் தேங்கிய தண்ணீரை மோட்டார் மூலம் அகற்றினோம்.

    சென்னையில் 43 தீயணைப்பு நிலையங்களில் உள்ள வீரர்கள் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களையும் சேர்த்து 1,700 பேர் தயார் நிலையில் உள்ளனர்.

    இது தவிர மீனவர் துறை சார்பாக மீனவ நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். மீனவர்கள் கடலுக்குள் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளோம்.

    அதே மாதிரி பொதுமக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், புயல் நெருங்கி வரும்போது காற்று வேகமாக வீசும் என்பதால் வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

    சென்னையில் பல வீடுகளுக்கு கேபிள் மூலம் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இங்கு மின்சார ஜங்ஷன் பாக்ஸ் பல இடங்களில் 3 அடிக்கு உயர்த்தி வைத்திருப்பதால் தண்ணீர் தேங்கினாலும் அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படாமல் தடையின்றி மின்சாரம் கிடைக்கும்.

    அதிகம் காற்று வீசும்போது மட்டும் உயர்மின் அழுத்தம் கொண்ட இடங்களில் கட்டாயம் மின் சப்ளை நிறுத்தப்படும். ஆனால் கேபிள் மூலம் மின்சாரம் வழங்கும் இடங்களில் தடை ஏற்படாத அளவுக்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
    • ஹன்ஸ்ராஜ் வர்மா அடுத்தாண்டு மே மாதமும் சிவ்தாஸ் மீனா அடுத்தாண்டு அக்டோபரிலும் ஓய்வு பெறுகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு 1988-ம் ஆண்டு தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரி. இவருக்கு வயது 60 ஆவதால் வரும் ஜூன் 30-ந்தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.

    இந்த நிலையில் தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் மூன்று பேர் பெயர்கள் பட்டியலில் உள்ளது.

    அதாவது தற்போதைய தமிழக அரசின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள 1986-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஹன்ஸ்ராஜ் வர்மா. இவர் தற்போது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக தலைவராக உள்ளார்.

    அடுத்தது, 1989-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான எஸ்.கே.பிரபாகர். இவர் தற்போது வருவாய்த் துறையின் கீழ் வரும் வருவாய் நிர்வாக ஆணையராக உள்ளார்.

    மூன்றாவது, இதே 1989-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவ்தாஸ் மீனா. இவர் தற்போது நகராட்சி நிர்வாகத்துறை செயலராக உள்ளார்.

    இதில், ஹன்ஸ்ராஜ் வர்மா அடுத்தாண்டு மே மாதமும் சிவ்தாஸ் மீனா அடுத்தாண்டு அக்டோபரிலும் ஓய்வு பெறுகின்றனர். எஸ்.கே.பிரபாகர் வரும் 2026-ம் ஆண்டு ஜனவரியில் ஓய்வு பெறுகிறார்.

    இவர்களில் பெரும்பாலும் சிவ்தாஸ் மீனா தமிழக அரசின் அடுத்த தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

    தலைமைச் செயலாளராக உள்ள இறையன்பு ஓய்வு பெற்றவுடன் மாநில தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷகில் அக்தர் மாநில தலைமை தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதன் காரணமாக தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெற்றவுடன், அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    இன்று தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். விரைவில் புதிய தலைமைச் செயலாளர் யார் என்பது முடிவு செய்து கவர்னருக்கு கோப்பு அனுப்பி வைக்கப்படும்.

    இதைத்தொடர்ந்து, தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்பதற்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு ஏற்கனவே கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.
    • தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு புதிய கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ் நாட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, 12 மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் சென்னையை தவிர 25 மாவட்டங்களுக்கு ஏற்கனவே கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவதாக தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்து இருக்கிறார்.

    தமிழகத்தில் புதிய அணைகள் கட்டும் பணி, குடிமராமத்து, நீர்நிலைகளை மீட்டெடுத்தல், நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சிறப்பு திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை கண்காணிக்க தனியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, வெள்ளநீர் தடுப்பு நடவடிக்கை, திடக்கழிவு மேலாண்மை, ஊரக பகுதி மக்களுக்கான அடிப்படை வசதி தேவைகள் உள்ளிட்ட பணிகளையும் இவர்கள் கண்காணிப்பார்கள்.

    மாவட்ட நிர்வாகத்துடன் கண்காணிப்பு அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்புவார்கள். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் பெயர் விவரம் வருமாறு:-

    அரியலூா் மாவட்டம்-சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை செயலா் அருண்ராய், கோவை மாவட்டம்-டிட்கோ நிா்வாக இயக்குநா் ஜெயஸ்ரீ முரளிதரன். கள்ளக்குறிச்சி மாவட்டம்-நெடுஞ்சாலைகள் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், காஞ்சீபுரம் மாவட்டம்-ஊரக வளா்ச்சித்துறை முதன்மைச் செயலா் பி.செந்தில்குமாா்.

    செங்கல்பட்டு மாவட்டம்- விவசாயத்துறை செயலாளர் சமயமூர்த்தி, திருவள்ளூர் மாவட்டம்-சிவில் சப்ளை கமிஷனர் வி.ராஜாராமன். நாகப்பட்டினம் மாவட்டம்-எரிசக்தித் துறைச் செயலா் ரமேஷ் சந்த் மீனா, நாமக்கல் மாவட்டம்-தகவல் தொழில்நுட்பவியல் துறைச் செயலா் குமர குருபரன், புதுக்கோட்டை மாவட்டம்-நில நிா்வாக ஆணையா் எஸ்.நாகராஜன்.

    ராமநாதபுரம் மாவட்டம்-மனிதவள மேலாண்மைத் துறைச் செயலா் நந்தகுமாா், ராணிப்பேட்டை மாவட்டம்-தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ், சேலம் மாவட்டம்-நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிா்வாக இயக்குநா் சங்கர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட் டம்-வணிகவரித்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி, கரூர்-மீன்வளத்துறை கமிஷனர் கே.எஸ். பழனிசாமி, மதுரை மாவட்டம்-முதன்மை செயலாளர் பி.சந்திரமோகன்.

    புதுக்கோட்டை மாவட்டம்-எஸ்.நாகராஜன், தஞ்சாவூர் மாவட்டம்-ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர்-ஆனந்த், தேனி-கார்த்திக், தூத்துக்குடி மாவட்டம்-சிஜி தாமஸ் வைத்யன், திருப்பூர்-டான்சி, முதன்மை செயலாளர்-விஜயகுமார், வேலூர் மாவட்டம்-ஆதி திராவிட பழங்குடி நலத்துறை செயலாளர் லஷ்மி பிரியா, விழுப்புரம் மாவட்டம்-பஞ்சாயத்து ராஜ் கமிஷனர்-ஹர் சஷாய் மீனா, விருதுநகர் மாவட்டம்-ஆனந்தகுமார்.

    • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திருக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.
    • திருக்குறள் மற்றும் தமிழ் கலைச்சொற்கள் எழுதும் பணியை கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும்.

    சென்னை:

    தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திருக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.

    ஆட்சி சொல்லகராதியில் இருக்கும் ஆங்கிலச் சொல் ஒன்றையும், அதற்குரிய தமிழ் சொல்லையும் கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.

    தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதை பின்பற்ற வேண்டும்.

    திருக்குறள் மற்றும் தமிழ் கலைச்சொற்கள் எழுதும் பணியை கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்று அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறைத்தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    • காவிரியில் நடப்பு ஆண்டு 2022-23ல் நீர் வழங்கும் காலத்தில், இதுவரை 658 டி.எம்.சி., நீர், தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
    • காவிரி ஆற்றில் ஆங்காங்கே பச்சை நிறத்துடன், சாக்கடை நீர் ஓடுகிறது.

    சென்னை:

    காவிரியில் கழிவு நீர் அதிகளவில் கலப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கர்நாடக அரசுக்கு, தமிழக தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    காவிரியில் நடப்பு ஆண்டு 2022-23ல் நீர் வழங்கும் காலத்தில், இதுவரை 658 டி.எம்.சி., நீர், தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

    காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த நீரளவை காட்டிலும், இது 484 டி.எம்.சி கூடுதல். நீர் வழங்கும் தவணை காலம் முடிவதற்கு மே வரை அவகாசம் உள்ளது. இந்நிலையில் பெங்களூரு நகரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நேரடியாக காவிரி ஆற்றில் விடப்படுகிறது.

    சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் ஆங்காங்கே பச்சை நிறத்துடன், சாக்கடை நீர் ஓடுகிறது. முறைப்படி கிடைக்கும் நீரில் பெரும் பகுதி கழிவு நீராகவே உள்ளது.

    காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க, தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் வட மாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தனர்.
    • சென்னை தலைமைச் செயலகம் சென்ற பீகார் அதிகாரிகள் தலைமைச் செயலாளர் இறையன்புவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

    சென்னை:

    வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவிய நிலையில் பீகார், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் கொண்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் குழு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை வந்து சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை ஆணையர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஆலோசித்தனர்.

    இதன் தொடர்ச்சியாக சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் வட மாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தனர்.

    இந்த நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகம் சென்ற பீகார் அதிகாரிகள் தலைமைச் செயலாளர் இறையன்புவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த கூட்டத்தில் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர்.

    • அடையாறு ஆறு பகுதிகளிலும் எடுக்கப்பட்டு உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.
    • ஆய்வின்போது தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.

    சென்னை:

    சென்னை புறநகர் பகுதியான பம்மல் பகுதியில் ஒரு கோடியே 25 லட்சம் செலவில் நடைபெறும் ஓடை வடிகால் பணிகள் அனகாபுத்தூர் மேட்டு தெருவில் 4 கோடியே 50 லட்சம் செலவில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளையும் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அடையாறு ஆறு பகுதிகளிலும் எடுக்கப்பட்டு உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர் ஆய்வு செய்தார். அனகாபுத்தூர் பாலத்துக்கும் சென்று பார்வையிட்டார்.

    மழைநீர் வடிகால் பணிகளை பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு தடுப்புகள் ஏற்படுத்தி தரமாக முடிக்க வேண்டும் என்றும் மழைநீர் கால்வாய் பணிகள் முடிவடைந்த பகுதிகளில் உடனடியாக பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சாலைகளை சீரமைக்கவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

    அவருடன் நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் பொன்னையா, தாம்பரம் மாநகராட்சி வெள்ளத்தடுப்பு கண்காணிப்பு அலுவலர் ஜான் லூயிஸ், பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.

    • பருவ மழையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • சில இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, வேலைகள் முடிவு பெறாமல் உள்ள நிலையில் பள்ளங்கள் மூடப்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு தலைமை செயலாளர் வெ.இறையன்பு, அரசு முதன்மை செயலாளர் அமுதாவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    பருவ மழையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சில இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, வேலைகள் முடிவு பெறாமல் உள்ள நிலையில் பள்ளங்கள் மூடப்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது சாமானிய மக்களுக்கு, பாத சாரிகளுக்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.

    எனவே மழை நீர் வடிகால் பணிகள் மற்றும் வேறு சில வேலைகளுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களும் மற்றும் குழிகளும் மூடப்படாதிருப்பின் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகள் மற்றும் அடையாள பலகைகள் வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும் சாலைகளில் மழை நீர் வடிவதற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மூடி திறந்திருப்பின், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவண்ணம் தடுப்புகள், அடையாள பலகைகள் ஆகியவற்றை மேற்கொள்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தொடர்புடைய துறை தலைவர்களுக்கும் அறிவுறுத்துமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
    • கோவையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக குனியமுத்தூர், ஒப்பணக்கார வீதி, 100 அடி ரோடு, காந்திபுரம் உள்பட சில இடங்களில் பெட்ரோல் மற்றும் மண்எண்ணெய் குண்டு வீசப்பட்டது. இதனால் கோவையில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து போலீசார் கோவையில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

    சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், ஐ.ஜி.சுதாகர், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கோவையில் அமைதியை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.

    ×