search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special classes"

    மாணவர்களின் நலன்கருதி கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #SummerHoliday
    சென்னை:

    பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மாணவர்களின் நலன்கருதி கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என்று கடந்தாண்டு அறிவுறுத்தப்பட்டது. தற்போது கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை பள்ளிகளில் நடத்துவதாக புகார்கள் வருகின்றன.

    கோடையில் வெயில் அளவு அதிகரித்துள்ளதால், மாணவர்களுக்கு வெப்பம் சார்ந்த நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவர்களுக்கு கட்டாயம் ஓய்வளிக்க வேண்டும். கோடை விடுமுறை என்பது மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தங்கள் உறவினர்களோடு பழகவும், உறவுகளின் அவசியத்தை தெரிந்துகொள்ளவும், உறவுகளை மேம்படுத்தவும் ஒரு நல்ல வாய்ப்பு ஆகும். இதனால் மாணவர்களின் வாழ்வியலில் விழுமியம் ஏற்படும்.

    எனவே மாணவர்களின் நலன்கருதி கோடை விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிகளுக்கு திட்டவட்டமாக தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இதுதொடர்பாக பெற்றோரிடம் இருந்து பள்ளிகள் மீது புகார் வந்தால், அதன்மீது எவ்வித காலதாமதமின்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #SummerHoliday
    சிறப்பு வகுப்பு காரணமாக திண்டுக்கல்லில் பிளஸ்-2 மாணவன் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் யூசுப்பியா நகரைச் சேர்ந்த சாதிக் மகன் பாட்ஷா (வயது 17). திண்டுக்கல் நேருஜி நகரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அரசு பொதுத் தேர்வு என்பதால் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் அனைவரும் பள்ளியிலேயே தங்கி அதிகாலை நேரத்திலும், இரவு நேரத்திலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    பிளஸ்-2 மட்டுமின்றி 10 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இன்று காலை படிப்பதற்காக எழுந்த பாட்ஷாவின் உடல் சோர்வுடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

    அவரை காட்டாஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது பெற்றோர் தெரிவிக்கையில் எனது மகனுக்கு அவ்வப்போது வலிப்பு நோய் வரும். அதனுடன் சிறப்பு வகுப்புக்காக மிகுந்த நேரம் ஒதுக்கி படித்ததால் மனச்சோர்வு மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டது. அதனால் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்தார். மாணவர்களை அவர்கள் சக்திக்கு தகுந்தவாறு அதிக சிரமம் கொடுக்காமல் படிக்க வைத்தால் அவர்கள் நல்ல முறையில் முன்னேறுவார்கள் என்றனர்.

    திண்டுக்கல்லில் பிளஸ்-2 மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×