செய்திகள்
மு.க.ஸ்டாலின்

தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்

Published On 2021-04-15 12:12 GMT   |   Update On 2021-04-15 12:12 GMT
கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பி வைக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் காட்டுத் தீ போல் அதிகரித்து வருகின்ற சூழலில் அனைவருக்கும் தடுப்பூசி எனக் கொள்கை முடிவு எடுக்க வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு, அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி என்ற முடிவினை எடுத்திருப்பது மிகுந்த மன வேதனையளிக்கிறது.

கொரோனா தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,985 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 7,819 பேர் பாதிக்கப்பட்டு, சென்னை, செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், மதுரை, திருவள்ளூர், திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் கொரோனா தொற்று அதி வேகமாகப் பரவி வருவதாகத் தமிழக அரசின் புள்ளிவிவரங்களே தெரிவிக்கின்றன.

எனவே, கொரோனா தொற்று தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி - மருத்துவமனைகள் எல்லாம் நிரம்பி வழியும் சூழ்நிலை உருவாகியுள்ள இந்த நேரத்தில், அனைவருக்கும் தடுப்பூசி என்ற கொள்கை முடிவினை எடுத்து தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளைத் தாமதமின்றி போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய அரசை - குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News