செய்திகள்
போராட்டம்

உரங்கள் விலை உயர்வுக்கு டெல்டா விவசாயிகள் கண்டனம்- குறைக்காவிட்டால் போராட்டம் நடத்த முடிவு

Published On 2021-04-10 12:09 GMT   |   Update On 2021-04-10 12:09 GMT
மத்திய அரசோ உர விலை உயர்வுக்கும் தங்களுக்கும் தொடர்பு கிடையாது என கூறுகிறது. மாறாக உர நிறுவனங்கள் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என கூறியது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

தஞ்சாவூர்:

இந்த ஆண்டு மேட்டூர் அணையில் 100 அடி தண்ணீர் உள்ளதால் குறுவை சாகுபடி மேற்கொள்ள தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் தயார் நிலையில் உள்ளனர். தற்போது நிலத்தடி நீரை பயன்படுத்தி முன் பட்ட குறுவை சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

மேலும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி உற்பத்தி செய்யப்பட்ட விவசாய பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது சாகுபடிக்கு தேவையான அடியுரமான டை அமோனியம் பாஸ்பேட் உரத்தின் விலை 1250 இல் இருந்து 1900 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சுமார் 60 சதவீதம் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்ணன் கூறும்போது:-

வேளாண் பொருட்களின் உற்பத்தி விலையை உயர்த்த கோரி கோரிக்கை வைத்து வரும் நிலையில் அடி உரமான டி.ஏ.பி. உரத்தின் விலையை உர நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது கடும் கண்டனத்திற்கு உரியது. ஆனால் மத்திய அரசோ உர விலை உயர்வுக்கும் தங்களுக்கும் தொடர்பு கிடையாது என கூறுகிறது. மாறாக உர நிறுவனங்கள் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என கூறியது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. டிஏபி உரம் என்பது கடந்த 3 மாதமாக கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை கடுமையாக உயந்திருப்பது போல் தற்போதுஉரங்களின் விலையையும் மத்திய அரசு உயர்த்தி உள்ளது எந்த விதத்தில் நியாயம்? விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாக உதட்டளவில் கூறி விட்டு உள்ளத்தளவில் உர ஆலை அதிபர்களுக்கு வருவாயை இரட்டிப்பாக்குகிற விவசாய விரோத செயல் இது. எனவே கண்மூடித்தனமாக உயர்த்தப்பட்ட உர விலையை உடனே குறைக்க வேண்டும். இல்லையென்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

Tags:    

Similar News