செய்திகள்
கவர்னர் பன்வாரிலால் புரோகித்

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் உலக அளவில் தமிழகம் சாதனை- கவர்னர் உரையில் தகவல்

Published On 2021-02-02 07:06 GMT   |   Update On 2021-02-02 07:06 GMT
கொரோனா நோயை எதிர்கொள்வது பொது சுகாதார உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் அரசு செய்த முதலீடுகள், பெரிய அளவில் பலன் அளித்துள்ளதாக கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

2021-ம் ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையில்:-

கொரோனா தடுப்பு பணிகள், காய்ச்சல் முகாம்கள் மூலம் நோய் கண்காணிப்பு, தொடர் பரிசோதனை மற்றும் நோய் தொற்றின் தடம் அறிதல் நடவடிக்கைகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டன.

ஆர்.டி.- பி.சி.ஆர். பரிசோதனை கருவிகள், மருத்துவ உபகரணங்கள், முழு உடல் பாதுகாப்புக் கவச உடைகள் மற்றும் தரமான மருந்துகள் போதிய அளவில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டன.

ஆர்.டி.- பி.சி.ஆர். பரிசோதனை முறையில் விலை, பிற பரிசோதனை முறைகளை விட அதிகமாக இருந்தாலும், அதன் உயர் தரத்தினைக் கருத்தில் கொண்டு, நாட்டிலேயே பிரத்யேகமாக ஆர்.டி.-பி.சி.ஆர் பரிசோதனை முறையை கையாண்ட ஒரே பெரிய மாநிலம் தமிழ்நாடாகும்.

நோயின நிகழ்வை சரியாகக் கண்டறிவதையும், நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதையும் இது உறுதி செய்துள்ளது.

கொரோனா நோயை எதிர்கொள்வது பொது சுகாதார உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் இந்த அரசு செய்த முதலீடுகள், பெரிய அளவில் பலன் அளித்துள்ளன.

சுகாதார உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு, மருத்துவமனைகளிலும், கோவிட் பராமரிப்பு மையங்களிலும் கூடுதலாக 1 லட்சத்து 38 ஆயிரத்து 309 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. ஆக்சிஜன் வசதிகள் கொண்ட 34 ஆயிரத்து 849 படுக்கைகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டன.

மேற்கூறிய நடவடிக்கைகள் வாயிலாக இந்தியாவின் ஏனைய மாநிலங்கள் இடையே மட்டுமல்லாது, உலக அளவில் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதிலும், உயிர் இழப்பைக் குறைப்பதிலும் தமிழ்நாடு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நோய்த் தொற்று மீண்டும் பரவுவதைத் தடுப்பதற்கான தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் உறுதி செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் கோவிட் தடுப்பூசி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளதை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன். மாநிலம் முழுவதும் கோவிட் தடுப்பூசி திறம்பட வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து மக்களுக்கும், அரசு உரிய நேரத்தில் படிப்படியாக தடுப்பூசியை வழங்கும்.

இவ்வாறு கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News