செய்திகள்
கொரோனா தடுப்பூசி

குமரியில் 3வது நாளில் 141 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது- அதிகாரி தகவல்

Published On 2021-01-19 06:59 GMT   |   Update On 2021-01-19 06:59 GMT
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 141 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதன் மூலம் பயனடைந்தவர்கள் எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது.
நாகர்கோவில்:

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16-ந் தேதி தொடங்கியது. இதே போல குமரி மாவட்டத்தில் அன்றைய தினம் 4 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடந்தது.

தடுப்பூசியை பொறுத்த வரையில் முதற்கட்டமாக மருத்துவம் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஒரு மையத்தில் நாள் ஒன்றுக்கு 100 பேர் வீதம் மொத்தம் 400 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் முதல் நாளில் 55 பேரும், நேற்று முன்தினம் 44 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டனர். ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட முன்வரவில்லை என்று கூறப்பட்டது.

எனவே தடுப்பூசி தொடர்பாக மருத்துவர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தடுப்பூசி போட்டுக்கொள்ள பலரும் ஆர்வம் காட்டினர். ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் ஏராளமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அந்த வகையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 86 பேரும், பத்மநாபபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் 14 பேரும், குழித்துறை தாலுகா ஆஸ்பத்திரியில் 18 பேரும், செண்பகராமன்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 23 பேரும் என மொத்தம் 141 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதன் மூலம் குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது.

இதுபற்றி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் போஸ்கோ ராஜனிடம் கேட்டபோது, “குமரி மாவட்டத்தில் முதல் 2 நாட்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள குறைவான நபர்களே முன் வந்தனர். தடுப்பூசியால் பக்க விளைவு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே தடுப்பூசி தொடர்பான அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. டாக்டர்கள், நர்சுகள் மற்றும் சுகாதார பணியாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்களிடம் கலந்தாலோசிக்கும்படியும் கூறி வருகிறோம். தற்போது வரை தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் பக்கவிளைவு ஏற்படவில்லை என்பதை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தற்போது பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள். அனைவரும் அச்சமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக மாணவ, மாணவிகளுக்கு வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படும் என்றார்.
Tags:    

Similar News