செய்திகள்
டாக்டர் ராமதாஸ்

விவசாயிகளின் அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2021-01-15 22:26 GMT   |   Update On 2021-01-15 22:26 GMT
விவசாயிகளின் அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பல நாட்களாக பட்டினியில் வாடிய ஒருவருக்கு கிடைத்த உணவை வாய்க்கு கொண்டு செல்லும்போது, அந்த உணவு தட்டிப்பறிக்கப்பட்டால், அவர் எந்த மனநிலையில் இருப்பாரோ, அதே மனநிலையில்தான் தமிழ்நாட்டு விவசாயிகள் இருக்கிறார்கள். விவசாயிகளின் குறைகள் உடனடியாக களையப்படாவிட்டால் அவர்கள் தங்களின் எதிர்காலத்தையே இழந்துவிடும் ஆபத்து இருப்பதை மறுக்கமுடியாது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு என்பது மிகவும் குறைவு. அரசு வழங்கும் இழப்பீட்டை கொண்டு வாங்கிய கடனுக்கு வட்டியைக்கூட செலுத்தமுடியாது என்பதுதான் உண்மை. எனவே, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது மட்டுமின்றி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து வகையான பயிர்க்கடன்களையும் எந்தவித நிபந்தனையுமின்றி தள்ளுபடி செய்ய அரசு முன்வர வேண்டும்.

அதற்காக தமிழக அரசுக்கு ஆகும் செலவு, அண்மையில் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்குவதற்காக செலவிடப்பட்ட தொகையைவிட அதிகமாக இருக்காது. அதேநேரத்தில் உணவு படைக்கும் கடவுள்களின் கண்ணீரை இது துடைக்கும். எனவே, விவசாயிகள் வாங்கியுள்ள அனைத்து வகையான பயிர்க்கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். அதற்கான செலவில் ஒரு பகுதியை மத்திய அரசிடம் இருந்து பெற்று கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News