செய்திகள்
கனிமொழி

கூடங்குளம் பகுதி மீனவர்களுடன் கலந்துரையாடிய கனிமொழி எம்பி

Published On 2020-12-23 07:23 GMT   |   Update On 2020-12-23 07:23 GMT
கனிமொழி எம்.பி. 2 நாள் பிரசாரமாக நெல்லை மாவட்டம் வந்துள்ளார். இன்று காலை அவர் கூட்டாம்புளி மீனவ கிராமத்திற்கு சென்று அங்குள்ள மீனவர்களிடம் கலந்துரையாடல் நடத்தினார்.

நெல்லை:

தி.மு.க. சார்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற முழக்கத்தோடு கட்சியின் முன்னணி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன்படி கனிமொழி  2 நாள் பிரசாரமாக நெல்லை மாவட்டம் வந்துள்ளார். இன்று காலை அவர் கூட்டாம்புளி மீனவ கிராமத்திற்கு சென்று அங்குள்ள மீனவர்களிடம் கலந்துரையாடல் நடத்தினார்.

அப்போது மீனவர்களின் கோரிக்கைகளையும், தேவைகளையும் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் கடற்கரை பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அவரிடம் மீனவர்கள், நாங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கடலரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் எங்கள் கோரிக்கை நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது என்று கூறினர்.

அதற்கு பதில் அளித்த கனிமொழி  இன்னும் 4 மாதங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் உங்கள் கோரிக்கைகளை அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார்.

பின்னர் அவர் காமராஜர் திடல், செட்டிக்குளம் மீனவர்கள், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு இடம் கொடுத்தவர்கள் மற்றும் அனல் மின் நிலைய போராட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வெளிநாடு செல்ல முடியாமல் உள்ளவர்களை சந்தித்து கலந்துரையாடினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பதவி ஆசை இருக்கலாம். ஆனால் பதவி வெறி இருக்க கூடாது என்று கூறி உள்ளார். இதே தான் நாங்களும் கூறுகிறோம். அ.தி.மு.க.வினருக்கு பதவி ஆசை இருக்கலாம், ஆனால் பதவி வெறி இருக்கக்கூடாது.

பதவி வெறி இருப்பதால் தான் அவர்கள் தமிழ்நாட்டின் உரிமைகள், விவசாயிகளின் உரிமைகள், தொழிலாளர்களின் உரிமைகளை தொடர்ந்து மத்தியில் அடகு வைத்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் புரிந்து கொண்டால் சரிதான்.

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக ஏராளமான வழக்குகள் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும்.

கூட்டாம்புளி பகுதி மீனவர்கள் கோரிக்கையின் படி அப்பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மீனவர்களின் நலன் காக்கவும், அவர்களின் வளர்ச்சிக்காகவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News