செய்திகள்
கைது

திருமணம் செய்வதாக கூறி பெண்ணிடம் 25 பவுன் நகை மோசடி செய்தவர் கைது

Published On 2020-12-20 22:48 GMT   |   Update On 2020-12-20 22:48 GMT
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, பெண்ணை ஏமாற்றி 25 பவுன் நகை மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோவை:

கோவை குனியமுத்தூரை சேர்ந்த 27 வயது பெண் விவகாரத்து பெற்று, பெற்றோருடன் வசித்து வந்தார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த பெண்ணுக்கு 2-வதுதிருமணம் செய்து வைக்க ஆன்லைனில் உள்ள திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தனர். அந்த தகவல் மையத்தில் பதிவு செய்து இருந்த ஆண்கள் சிலர் இவருக்கு விருப்பம் தெரிவித்தனர். இதில் விழுப்புரத்தை சேர்ந்த 30 வயது வாலிபர், அடிக்கடி தொடர்பு கொண்டு தான் தொழில் அதிபர் என்றும் அந்த பெண்ணை பிடித்து இருப்பதாகவும், திருமணம் செய்து வைத்தால் நல்லபடியாக பார்த்துக்கொள்வதாக கூறியதால் அந்த பெண்ணும் தனது செல்போன் எண்ணை கொடுத்து விவரங்களை பரிமாறிக்கொண்டார். தனக்கு நல்ல வாழ்க்கை துணை கிடைத்துவிட்டதாக அந்த பெண் மகிழ்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில் மறுமணம் செய்ய வேண்டுமானால், நகையை வைத்து பரிகாரம் செய்தால் சரியாகிவிடும் என்று வேதமந்திரம் ஓதுபவர் ஒருவர் கூறுவதாக அந்த வாலிபர் கூறியுள்ளார். இதனை நம்பி அந்த பெண், 25 பவுன் நகையை கொடுத்துள்ளார். கோவை வந்து நகையை பெற்றுச்சென்ற அந்த வாலிபர், அதன்பின்னர் தொடர்பு கொள்ளவில்லை. நகையையும் திருப்பி கொடுக்கவில்லை. போன் செய்தால் அந்த வாலிபர் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் விழுப்புரத்துக்கு வந்து வாலிபரை பார்க்க வருவதாக அந்த பெண் கூறியுள்ளார். அப்போது தன்னை பார்க்க வர வேண்டாம் என்றும் தனக்கு கொரோனா இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் தான் நகைகளை கொடுத்து ஏமாந்து இருப்பதை உணர்ந்த அந்த பெண் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் சுலைகா தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணிடம் நகை மோசடி செய்தவர் முகமது ரகமத்துல்லா என்ற முகமது சப்வான் (30), விழுப்புரம் அருகே உள்ள கோட்டுகுப்பம் பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது.

இதனை தொடர்ந்து விழுப்புரத்துக்கு சென்ற போலீசார் முகமது ரகமத்துல்லாவை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இதேபோல் சேலத்தைசேர்ந்த இளம்பெண்ணிடம் முகமது ரகமத்துல்லா 8 பவுன் நகைகளை மோசடி செய்துள்ளார். மேலும் பல பெண்களிடம்அவர் ஏமாற்றி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கைதான முகமது ரகமத்துல்லா சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News