செய்திகள்
மின்னல் தாக்கி இறந்தவரின் குடும்பத்திற்கு அமைச்சர் ஆர்பி உதயகுமார் காசோலையை வழங்கினார்

ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Published On 2020-12-08 03:37 GMT   |   Update On 2020-12-08 03:37 GMT
திருமங்கலத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
திருமங்கலம்:

திருமங்கலத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. மாணிக்கம், அவைத்தலைவர் அய்யப்பன், மாவட்ட பேரவை செயலாளர் தமிழழகன், ஒன்றிய செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில் 532 பேருக்கு உதவித்தொகை, இயற்கை இடர்பாடுகளால் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சத்திற்கான காசோலை, மழையால் வீடு இடிந்து பாதிக்கப்பட்ட 36 பேருக்கு நிவாரண தொகை, உழவர் பாதுகாப்பு திட்டத்தில் 6 பேருக்கு நிவாரண உதவி தொகை, 51 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா உள்பட 643 பேருக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

திருமங்கலம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரெயில்வே மேம்பாலம் மற்றும் பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. ரெயில்வே மேம்பாலம் கட்ட விரைவில் பூமிபூஜை நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது புயலை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வருகின்றனர்.

தி.மு.க. ஆட்சி காலத்தில் மழையால் உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய்தான் வழங்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ரூ.4 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதனை ரூ.10 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளார். தற்போது 2 புயல்கள் ஏற்பட்டபோதிலும் முதல்-அமைச்சரின் தீவிர நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

புயலின்போது முதல்-அமைச்சர் அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு வருகை தந்து கனமழை நிலவரம் குறித்து ஆய்வு செய்தார். முதல்-அமைச்சர் 4 சுவருக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டு காணொலி காட்சி மூலம் அரசியல் செய்பவர் அல்ல. புயல் நிவாரணப் பணிகளில் சிறப்பாக ஈடுபட்டு வரும் அவரை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

விழாவில் மாவட்ட மீனவர் அணி செயலாளர் சரவண பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு சிங்கராஜ பாண்டியன், வர்த்தக பிரிவு சதீஷ் சண்முகம், ஒன்றிய தலைவர் லதா ஜெகன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆண்டிச்சாமி, செல்வம், மின்னல்கொடி, இணைச் செயலாளர் சாமிநாதன், ஒன்றிய நிர்வாகிகள் முத்துராஜா, விக்னேஸ்வரன், விவேக், ஜெயமணி, அன்னக்கொடி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News