செய்திகள்
கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபர்.

கோவில்பட்டியில் மருந்து கடையில் நூதன முறையில் ரூ.25 ஆயிரம் திருட்டு

Published On 2020-12-03 14:17 GMT   |   Update On 2020-12-03 14:17 GMT
கோவில்பட்டியில் மருந்து கடையில் நூதன முறையில் ரூ.25 ஆயிரத்தை திருடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவில்பட்டி:

கோவில்பட்டி லட்சுமி மில் மேல காலனியைச் சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ (வயது 48). இவர் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் தெற்கு ரத வீதியில் கால்நடை மருந்து கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் 2 பெண்கள் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

நேற்று முன்தினம் மருந்து கடையில் 2 பெண் ஊழியர்களும் பணியில் இருந்தனர். அப்போது அங்கு வந்த டிப்-டாப் உடை அணிந்த வாலிபர் தனக்கு ஏராளமான கால்நடை மருந்துகள் தேவைப்படுவதாக கூறினார். தொடர்ந்து அவர், 3 அட்டை பெட்டிகள் நிரம்பும் அளவுக்கு அதிகளவில் கால்நடை மருந்துகளை வாங்கினார்.

அப்போது அந்த வாலிபர், கடையில் இருந்த பெண் ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி, கடையின் மேஜையில் இருந்த ரூ.25 ஆயிரத்தை நைசாக திருடினார். பின்னர் அவர், அனைத்து மருந்துகளையும் அட்டை பெட்டிகளில் தயாராக எடுத்து வையுங்கள். அவற்றை எடுத்து செல்வதற்காக ஆட்டோவை அழைத்து வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் அந்த மர்ம நபர் திரும்பி வரவில்லை.

அப்போது கடையில் மேஜையில் இருந்த ரூ.25 ஆயிரம் திருடு போனதை அறிந்த பெண் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடை உரிமையாளர் ஜான் பிரிட்டோவுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அவர் உடனே தனது கடைக்கு வந்து, அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்தார். அப்போது மருந்து வாங்குவது போன்று நடித்த வாலிபர் ரூ.25 ஆயிரத்தை திருடிச் சென்றது பதிவாகி இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News