செய்திகள்
ராஜேஸ்வரி

விழுப்புரம் மாவட்டத்தில் மழைக்கு 2 பேர் பலி

Published On 2020-11-27 10:12 GMT   |   Update On 2020-11-27 10:12 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் மழைக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள கோனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி மனைவி ராஜேஸ்வரி(வயது 42). இவர் நேற்று முன்தினம் இரவு தனது கணவர் மற்றும் மகன் ஆதித்யா, மகள் ஆர்த்தி ஆகியோருடன் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது இரவு 11.30 மணியளவில் பலத்த மழையின்போது ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ராஜேஸ்வரி, இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே ராஜேஸ்வரி இறந்து விட்டதாக கூறினர்.

இதேபோல் கண்டாச்சிபுரம் அருகே கெங்கவரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(47), கட்டிட தொழிலாளி. இவர் தனது மகள் நித்யாவின் திருமணத்திற்காக நேற்று முன்தினம் தனது வீட்டில் பந்தல் போட்டிருந்தார். அப்போது இரவில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தபோது எதிர்பாராதவிதமாக அந்த பந்தல், சரவணன் மீது விழுந்தது.

அப்போது அதில் இருந்த மின்சார விளக்குகளுக்காக போடப்பட்டிருந்த ஒயர், சரவணன் மீது விழுந்ததில் அவர் மீது மின்சாரம் தாக்கி இறந்தார்.
Tags:    

Similar News