செய்திகள்
ஜெயமாலா

3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு : தலைமறைவான ஜெயமாலா, தம்பியுடன் கைது

Published On 2020-11-19 20:49 GMT   |   Update On 2020-11-19 20:49 GMT
சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ஜெயமாலா உள்பட 3 பேரும் டெல்லி அருகே ஆக்ராவில் கைது செய்யப்பட்டனர்.
சென்னை:

சென்னை சவுகார்பேட்டையில் கடந்த 11-ந்தேதி அன்று பட்டப்பகலில் நிதிநிறுவன அதிபர் தலில்சந்த் (வயது 74), அவரது மனைவி புஷ்பாபாய், மகன் ஷீத்தல் குமார் ஆகியோர் கொடூரமான முறையில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர். தலில்சந்தின் காது வழியாக குண்டு பாய்ந்திருந்தது. மற்ற இருவரின் நெற்றி பொட்டில் துப்பாக்கி குண்டுகள் துளைத்திருந்தன.

இந்த கொடூர கொலை தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. குருவி, காக்காவை சுட்டு தள்ளுவதுபோல ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை நொடிப்பொழுதில் சுட்டுத்தள்ளிவிட்டு கொலையாளிகள் தப்பிச்சென்று விட்டனர்.

இந்த படுகொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்தவர்கள் என்பதை போலீசார் உடனடியாக கண்டுபிடித்து விட்டனர். கொலை செய்யப்பட்ட ஷீத்தல்குமாரின் மனைவி ஜெயமாலா அவரைவிட்டு பிரிந்து, புனேவில் அவரது பெற்றோர் வீட்டில் வாழ்ந்தார். 2 குழந்தைகள் அவர்களுக்கு உள்ளனர்.

ஷீத்தல் மனநலம் பாதிக்கப்பட்டவர். அவரும், அவரது பெற்றோர் தலில்சந்த், புஷ்பாபாய் ஆகியோர் செய்த கொடுமை காரணமாகவே ஜெயமாலா ஷீத்தலை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

மேலும் வாழ்வாதாரத்திற்காக ஜெயமாலாவுக்கு ரூ.4 கோடியும், சொத்தில் பங்கும் கேட்கப்பட்டது. அதற்கு ஷீத்தலின் தந்தை தலில்சந்த் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் ஜெயமாலா தனது தம்பிகள் கைலாஷ், விலாஷ் மற்றும் அவர்களது நண்பர்கள் 3 பேருடன் சென்னை வந்து, மேற்கண்ட 3 பேரையும் துப்பாக்கியால் சுட்டு தீர்த்து கட்டிவிட்டு தப்பிச்சென்று விட்டார்கள்.

ஜெயமாலா தனது ஒரு தம்பி விலாஷ் மற்றும் ஒரு நண்பருடன் காரில் தப்பிச் சென்றார். ஜெயமாலாவின் இன்னொரு தம்பி கைலாஷ் தனது நண்பர்கள் ரவீந்திரநாத்கர், விஜய்உத்தம் ஆகியோருடன் மற்றொரு காரில் தப்பினார். கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் அருண், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர் மகேஷ்வரனின் நேரடி மேற்பார்வையில் 5 தனிப்படையினர் இந்த வழக்கில் விசாரணை நடத்தினார்கள்.

இன்ஸ்பெக்டர் ஜவஹர் தலைமையிலான தனிப்படையினர் சென்னையில் இருந்து விமானத்தில் புனே சென்று, கைலாஷ் அவரது நண்பர்கள் ரவீந்திரநாத்கர், விஜய்உத்தம் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் 3 பேரை கொல்வதற்கு பயன்படுத்திய துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான கைலாஷ் உள்பட 3 பேரும் புனேவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். தீவிர விசாரணைக்குப்பிறகு அவர்கள் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து தற்போது விசாரணை நடத்தப்படுகிறது.

போலீஸ் கையில் சிக்காமல் தப்பிச்சென்ற ஜெயமாலா அவரது தம்பி விலாஷ் உள்பட 3 பேரையும் பிடிக்க உதவி கமிஷனர் ஜூலியர்சீசர் தலைமையிலான தனிப்படை போலீசார் தொடர்ந்து மராட்டிய மாநிலம் புனேயில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் டெல்லி அருகே ஜெயமாலா தனது தம்பி விலாஷ் மற்றும் கூட்டாளியுடன் பதுங்கி இருப்பதாக நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் இதுகுறித்து டெல்லி போலீசாருக்கு தகவல் கொடுத்து அவர்களை கைது செய்ய கேட்டுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து ஜெயமாலா உள்ளிட்ட 3 பேரையும் டெல்லி போலீசார் ஆக்ராவில் வைத்து கைது செய்து விட்டதாக நேற்று மாலை தகவல் கிடைத்தது. அவர்களை சென்னை அழைத்துவர தனிப்படை டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும், கைதான 3 பேரும் தனிப்படை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர்தான் இதுபற்றி எந்த தகவலையும் சொல்ல முடியும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News