செய்திகள்
கோப்புபடம்

கோபி பகுதியில் கொள்ளையடிக்க முயன்றதாக சென்னையை சேர்ந்த 5 பேர் கும்பல் ஆயுதங்களுடன் கைது

Published On 2020-10-11 15:54 GMT   |   Update On 2020-10-11 15:54 GMT
கோபி பகுதியில் கொள்ளையடிக்க முயன்றதாக சென்னையை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பலை ஆயுதங்களுடன் போலீசார் கைது செய்தனர்.
கடத்தூர்:

கோபி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மகன் கோபாலகிருஷ்ணன். பெயிண்டராக வேலை செய்து வருகிறார். கோபாலகிருஷ்ணனும், அவருடைய நண்பருமான செல்லபாண்டி என்பவரும் அந்த பகுதியில் உள்ள வாய்க்காலில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு கார் ஒன்று வந்து நின்றது. அந்த காரில் இருந்து 5 பேர் இறங்கி வாய்க்காலில் குளிக்க தொடங்கினர். அப்போது அவர்கள் கோபி பகுதியில் உள்ள வீடுகளில் இரவில் கொள்ளையடிப்பது குறித்து பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது.

இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த கோபாலகிருஷ்ணன், 5 பேர் வந்த காரின் பின்புறம் சென்று பார்த்தார். அப்போது அதில் பட்டா கத்திகள் மற்றும் வீச்சரிவாள் இருந்ததை கண்டார். உடனே அவர் இதுகுறித்து கோபி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாய்க்காலில் குளித்து கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ‘அவர்கள் சென்னை நங்கநல்லூர் கன்னித்தமிழ் தெருவை சேர்ந்த சத்யா என்கிற சத்யநாராயணன்(வயது 26), மடிப்பாக்கம் கிருஷ்ணாநகரை சேர்ந்த ராமசந்திரன் (28), நங்கநல்லூர் பி.வி.நகரை சேர்ந்த சீதாராமன் (36), பழைய பல்லாவரம் சுப்பிரமணியம் நகரை சேர்ந்த சுரேஷ் என்கிற சுடலைராஜா (26), மேடவாக்கம் பெரியார் நகரை சேர்ந்த மணிகண்டன் (24) என்பதும், அவர்கள் 5 பேரும் கோபி பகுதியில் திருட முயன்றனர்,’ என்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து 5 பேரையும் போலீசார் கைது செய்ததுடன் அவர்கள் வந்த கார், பட்டா கத்தி மற்றும் வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News