செய்திகள்
கோப்புபடம்

காரிமங்கலம் அருகே லாரிகளில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

Published On 2020-09-12 10:25 GMT   |   Update On 2020-09-12 10:25 GMT
காரிமங்கலம் அருகே 2 லாரிகளில் ரேஷன் அரிசி கடத்தியதில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
காரிமங்கலம்:

காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் காரிமங்கலம் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயசங்கர், முருகன், பசவராஜ் மற்றும் போலீசார் ராமாபுரத்துக்கு சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்திய போது சிலர் கீழே இறங்கி தப்பி ஓடினர். லாரியில் பதுங்கியிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த சந்தனூரை சேர்ந்த சிவஞானம் (வயது 39) என்பதும், தப்பியோடியவர்கள் சந்தனூரை சேர்ந்த கைலாசம் (31), மகேந்திரன் (37), கெரகோடஅள்ளியை சேர்ந்த மாதேஸ்வரன் (40), பையம்பட்டியானூரை சேர்ந்த முருகானந்தம் (40), நந்தகுமார் (35) ஆகியோர் என தெரியவந்தது.

போலீசார் சிவஞானத்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசியை சேகரித்து கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சிவஞானத்தை கைது செய்தனர். மேலும் 2 லாரிகளில் இருந்த 300 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காரிமங்கலம் பகுதியில் 2 லாரிகளில் ரேஷன் அரிசி கடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News