செய்திகள்
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி கருப்புக்கொடி ஏந்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-09-03 14:23 GMT   |   Update On 2020-09-03 14:23 GMT
டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி திருப்பூரில் 7 இடங்களில் கருப்புக்கொடி ஏந்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட அங்கேரிபாளையம் ரோடு, சிங்காரவேலன் நகரில் குடியிருப்பு மற்றும் பள்ளி அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி, சிங்காரவேலன்நகர், கந்தசாமி லே அவுட், பிச்சம்பாளையம், ஜீவாகாலனி, ஏ.வி.பி. லே அவுட், பத்மாவதிபுரம், அண்ணாகாலனி, டீச்சர்ஸ் காலனி ஆகிய குடியிருப்போர் நல சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டாஸ்மாக் மாவட்ட நிர்வாக அலுவலகம், கொங்கு வேளாளர் மேல்நிலைப்பள்ளி, சிங்கார வேலன் நகர், ஜீவா காலனி, பழைய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், அண்ணா காலனி, பிஷப் மேல்நிலைப்பள்ளி ஆகிய 7 இடங்களில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்கள் கைகளில் கருப்புக்கொடியை ஏந்தியபடி, டாஸ்மாக் கடைகளுக்குஎதிராக கோஷமிட்டனர். டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளையும் வைத்திருந்தனர்.

7 இடங்களிலும் சாலையோரம் வரிசையாக நின்றபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதிக்கு போலீசார் வந்தனர். மேலும், திருப்பூர் வடக்கு தாசில்தார் பாபு மற்றும் மண்டல துணை தாசில்தார் சரவணன், நில வருவாய் ஆய்வாளர்கள் வேலாயுதம், சரவணன் உள்ளிட்டோரும் அங்கு வந்தனர். தொடர்ந்து பொதுமக்கள் டாஸ்மாக் கடைகளை ஒரு வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதன் பின்னர் தாசில்தார் பாபு இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து, டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு, அங்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News