செய்திகள்
கோப்பு படம்.

திண்டுக்கல் அருகே போலீஸ் ஏட்டை கத்தியால் குத்தி தப்பிய ரவுடி

Published On 2020-08-27 08:00 GMT   |   Update On 2020-08-27 08:00 GMT
திண்டுக்கல் அருகே போலீஸ் ஏட்டை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னிவாடி:

திண்டுக்கல் அருகில் உள்ள கன்னிவாடி போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் திருப்பதி(40). இவர் நேற்று அதேபகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர்களை மடக்கி சோதனை நடத்தியதில் அதில் ஒருவன் திடீரென கத்தியால் ஏட்டுவை தலை மற்றும் கையில் குத்தினான். பின்னர் பைக்கில் அவர்கள் தப்பி ஓடினர்.

இதனையடுத்து உடனிருந்த மற்ற போலீசார் அவர்களை துரத்திச்சென்றனர். அப்போது பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த ஒரு வாலிபர் தப்பிக்க முயலும் போது போலீசாரிடம் மாட்டிக்கொண்டார்.

போலீசார் விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள கோட்டநத்தம்பட்டியை சேர்ந்த மணிகண்டன்(22) என தெரியவந்தது. அவருடன் வந்த நபர் அதேபகுதியை சேர்ந்த முத்துலிங்கம்(22) என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மணிகண்டனிடம் இருந்து 4 கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் குறித்து திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி முத்துச்சாமி, போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா ஆகியோர் விசாரணை நடத்தினர். பிடிபட்ட மணிகண்டன் மற்றும் தப்பி ஓடிய முத்துலிங்கம் ஆகியோர் மீது குற்றவழக்குகள் இருக்கலாம் என்று தெரியவந்தது. இதனையடுத்து மதுரை மாவட்டத்தில் இவர்கள் மீதான வழக்குவிபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

கத்தி மற்றும் ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றியதால் இவர்கள் வேறு யாரையாவது தீர்த்துகட்ட வந்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முத்துலிங்கம் தோணிமலை பகுதிக்குள் சென்றுவிட்டார். அவரை தேடி 2 தனிப்படை போலீசார் நேற்றுமுதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு இப்பகுதியில் நண்பர்கள் யாரேனும் உள்ளனரா? அல்லது கூட்டாக சேர்ந்து ஏதேனும் சதித்திட்டத்தில் ஈடுபட முயன்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அவரது செல்போன் எண்ணை டிரேஸ் செய்து எந்தபகுதியில் தங்கி உள்ளார் என்று போலீசார் தேடி வருகின்றனர். இப்பகுதியில் பெரும்பாலான இடங்கள் வனப்பகுதி என்பதால் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் குழுவாக ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி அருகே கடந்த வாரம் ரவுடியை பிடிக்க சென்றபோது போலீசார் கொலை செய்யப்பட்ட சம்பவம் மறைவதற்குள் திண்டுக்கல்லிலும் அதேபோன்று ஒரு சம்பவம் நடக்க இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News