செய்திகள்
கே.பாலகிருஷ்ணன்

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்

Published On 2020-08-10 20:37 GMT   |   Update On 2020-08-10 20:37 GMT
கொரோனா வைரசால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய கோரி தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது.
சென்னை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் சூதாட்டமும், லாட்டரி சீட்டு விற்பனையும் தடை செய்யப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். ஆனால், சமீப காலங்களில் ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடும் ஒரு மோசமான போக்கு தமிழகத்திலும் தலைவிரித்து ஆடுகிறது.

‘ரம்மி விளையாட வாங்க‘ என விளையாட்டு பிரபலங்கள் பலரும் பகிரங்கமாக தொலைக்காட்சியில் விளம்பரம் செய்கிறார்கள். தடை செய்யப்பட்ட சூதாட்டம் ஆன்லைனில் கனஜோராக நடப்பதும், அதற்கு பிரபலங்கள் விளம்பரங்கள் கொடுப்பதும் சூதாட்ட தடையை கேலி செய்வதாக உள்ளது.

ஏற்கனவே கொரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டு குடும்பங்களை நிர்க்கதியாக்குகிறது. எனவே, ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசையும், தமிழக அரசையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News