செய்திகள்
ராமதாஸ்

ஏற்கனவே தேர்ச்சி பெற்ற இளைஞர்களை காவலர் பணியிடங்களில் நேரடியாக நியமிக்க வேண்டும்- ராமதாஸ்

Published On 2020-08-01 09:23 GMT   |   Update On 2020-08-01 09:23 GMT
ஏற்கனவே உடற்தகுதி தேர்விலும், எழுத்துத் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ள 10 ஆயிரத்துக்கும் கூடுதலான இளைஞர்களை நேரடியாக காவலர் பணியில் நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக உடற்தகுதி தேர்வு, எழுத்துத்தேர்வு ஆகியவற்றைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம், 2-ம் நிலைக் காவலர்களாக 8,773 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதுதவிர மேலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் உடற்தகுதித் தேர்விலும், எழுத்துத் தேர்விலும் வெற்றி பெற்றிருந்தனர். ஆனாலும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

தற்போது தமிழக காவல்துறையில் 10 ஆயிரத்திற்கும் கூடுதலான காவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய சூழலில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்புவது சாத்தியமில்லை. அதுமட்டுமின்றி, நிலைமை சீரடைந்து அடுத்த காவலர் தேர்வு நடைபெறும்போது, இவர்களில் பலர் அதிகபட்ச வயது வரம்பை கடந்து விடுவார்கள். எனவே, ஏற்கனவே உடற்தகுதி தேர்விலும், எழுத்துத் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ள 10 ஆயிரத்துக்கும் கூடுதலான இளைஞர்களை நேரடியாக காவலர் பணியில் நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News