செய்திகள்
ராமேசுவரம் மீனவர்களுக்கு அதிக அளவில் கிடைத்த காரல் மீன்கள்

ராமேசுவரம் மீனவர்களுக்கு அதிக அளவில் கிடைத்த காரல் மீன்கள்

Published On 2020-07-29 13:22 GMT   |   Update On 2020-07-29 13:22 GMT
ராமேசுவரம் மீனவர்கள் ஒரு வாரத்திற்கு பிறகு மீன் பிடிக்க சென்று கரை திரும்பிய ஒவ்வொரு படகிலும் காரல் மீன்கள் 500 கிலோவில் இருந்து ஒரு டன் வரையிலும் கிடைத்துள்ளது.
ராமேசுவரம்:

ராமேசுவரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றனர். சுமார் 500-க்கும் அதிகமான படகுகளில் 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்று இருந்தனர். இந்த மீனவர்கள் அனைவரும் பலவகை மீன்களுடன் கரை திரும்பினார்கள். இதில் ஒவ்வொரு படகிலும் காரல் மீன்கள் சுமார் 500 கிலோவில் இருந்து ஒரு டன் வரை அதிகமாகவும், இறால் மீன்கள் சராசரியாக 40 கிலோ குறைவாக கிடைத்ததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுபற்றி ராமேசுவரம் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதி சேசுராஜா கூறியதாவது:-

ஒரு வாரத்திற்கு பிறகு மீன் பிடிக்க சென்று கரை திரும்பிய ஒவ்வொரு படகிலும் காரல் மீன்கள் 500 கிலோவில் இருந்து ஒரு டன் வரையிலும் கிடைத்துள்ளது. ஒரு கிலோ 20-க்கு விலை போன காரல் மீன்கள் தற்போது ரூ.50-க்கு விலை போனது. இதனால் மீனவர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளோம். ஆனால் அதே நேரம் இறால் மீன்கள் மிக குறைவாகவே வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News