செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தி வைக்கப்படவில்லை- முதலமைச்சர் பேட்டி

Published On 2020-07-15 09:19 GMT   |   Update On 2020-07-15 09:19 GMT
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தி வைக்கப்படவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் மிகவும் குறைவாகத்தான் உள்ளது. கிருஷ்ணகிரியில் இதுவரை 11,919 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு தேவையான கவச உடைகள், மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணிக்காக மத்திய அரசு இதுவரை ரூ. 672.25 கோடி வழங்கியுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகள் ரூ.10,000 கோடி ஒதுக்கியுள்ளது.

தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்தபடி 3 தவணையாக தலா ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை ஏரி, குளங்களுக்கு கொண்டு செல்வதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உபரிநீரை பயன்படுத்தும் திட்டத்திற்கான நில எடுப்பு பணிக்காக ரூ.72 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மின்பாதை அமைக்க முடியாத பகுதிகளில் சோலார் மூலம் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிதி ஒதுக்கி அரசு உதவி செய்து வருகிறது. கொரோனா பரவலை அடுத்த 10 நாட்களுக்குள் குறைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகளின் முழு ஒத்துழைப்பு தேவை. இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு தான்.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தி வைக்கப்படவில்லை. வாடிக்கையாளர்களின் டெபாசிட் பணத்தை திருப்பி அளிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர்கள் உள்ளனர். மலை கிராம பள்ளிகளிலும் போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News