செய்திகள்
ரேசன் கார்டு

ரேசன் பொருட்கள் வாங்குவதற்கு வீடு வீடாக நாளை டோக்கன் வினியோகம்

Published On 2020-05-01 11:43 GMT   |   Update On 2020-05-01 11:43 GMT
ரேசன் பொருட்கள் வாங்குவதற்கு வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணியில் நாளையும், நாளை மறுதினமும் ரேசன் ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இதற்காக ரேசன் கடைகளுக்கு இன்று டோக்கன்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை:

ரேசன் கடைகளில் இந்த மாதத்துக்கான (மே) அத்தியாவசிய பொருட்கள் 4-ந் தேதி முதல் இலவசமாக வினியோகம் செய்யப்பட உள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ரேசன் கடைகளில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வீடு வீடாக டோக்கன் வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.

ரேசன் கார்டுதாரர்கள் எந்த தேதியில் எத்தனை மணிக்கு ரேசன் கடைக்கு வரவேண்டும் என்பதை குறிப்பிட்டு வீடு வீடாக டோக்கன் வழங்க உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ரேசன் ஊழியர்கள் வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணியில் நாளையும், நாளை மறுதினமும் ஈடுபட உள்ளனர். இதற்காக ரேசன் கடைகளுக்கு இன்று டோக்கன்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த டோக்கனை நாளையும், நாளை மறுநாளும் ரேசன் கடை ஊழியர்கள் வீடு வீடாக வழங்க உள்ளனர். இதையொட்டி ஒவ்வொரு ரேசன் கடைக்கும் தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவற்றை அனுப்பும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரேசன் கடை ஊழியர் ஒருவர் கூறியதாவது:-

வீடு வீடாக ரேசன் பொருட்களுக்கு டோக்கன் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு ரேசன் கடைக்கு குறைந்தது 1,500 கார்டுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு ரேசன் கடை ஊழியர் ஒருவரால் இரண்டு நாளில் எப்படி டோக்கன் வழங்க முடியும்.

நண்பர்கள் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று டோக்கன் வழங்கினாலும் அதில் தேதி, நேரத்தை குறிப்பிடுவதிலும் ரேசன் கடை ஊழியர்களுக்கு சிக்கல் உள்ளது. ஏன் என்றால் நாங்கள் குறித்து கொடுக்கும் தேதியில் ரேசன் பொருட்கள் குடோனில் இருந்து வந்திருக்க வேண்டும்.

கடந்த முறை இதேபோல் வீடு வீடாக டோக்கன்களை கொடுத்து விட்டோம். ஆனால் பருப்பு, எண்ணெய் போன்றவை ரேசன் கடைகளுக்கு காலதாமதமாக தான் வந்தது. ஆனால் அதற்குள் மக்கள் ரேசன் கடையில் கூடி விட்டனர். அவர்களை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டி உள்ளது. காலையில் 75 கார்டு, மாலையில் 75 கார்டுக்கு ரேசன் பொருட்களை கொடுக்க சொல்லி உள்ளார்கள். எனவே அதற்கேற்ப நாங்கள் செயல்பட வேண்டி உள்ளது.

பொதுமக்களோடு நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் ரேசன் கடை ஊழியர்கள் தான். வீடு வீடாக டோக்கன் வழங்க சொல்கிறார்கள். இதில் கொரோனா எங்களுக்கு வந்து விடுமோ என்ற உயிர் பயமும் உள்ளது.

எனவே எங்களுக்கும் காப்பீடு திட்டத்தை அரசு அறிவித்தால் தான் தைரியமாக பணியாற்ற முடியும். உயிரை பொருட்படுத்தாமல் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்குவதற்கு எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் பயப்படுகிறார்கள். அதையும் தாண்டி தான் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News