செய்திகள்
கண்காணிப்பு கோபுரம்

வடமதுரை அருகே சோதனை சாவடியில் கண்காணிப்பு கோபுரம்

Published On 2020-04-25 13:20 GMT   |   Update On 2020-04-25 13:20 GMT
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொன்னம்பலம்பட்டி சோதனை சாவடியில் போலீசார் உயர் கோபுரம் அமைத்து கண்காணித்து வருகிறார்கள்.
வடமதுரை:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கும், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கும் பொதுமக்கள் வருவது தடை செய்யப்பட்டு உள்ளது. அத்தியாவசிய காரணங்களுக்காக உரிய முன் அனுமதியுடன் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் ஒரு மாவட்டத்தில் இருந்து அடுத்த மாவட்டம் செல்லவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மாவட்ட கலெக்டரிடம் உரிய அனுமதி பெற்ற பிறகே அதற்கான அனுமதி சீட்டுடன் பயணம் செய்யவேண்டும் என்ற நிலை நடைமுறையில் உள்ளது. எனினும் இதை மீறி சிலர் லாரிகள், வாகனங்களில் மறைந்திருந்து பயணம் செய்கின்றனர்.

தென்காசி மாவட்டத்துக்கு கேரளாவில் இருந்து காய்கறி லாரியில் பெட்டிகளிடையே மறைந்து அமர்ந்தபடி வந்த வாலிபர் போலீசாரிடம் பிடிபட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று உள்ளவர்கள் இவ்வாறு வந்தால் அதன் மூலம் நோய் பரவும் என எண்ணி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொன்னம்பலம்பட்டி சோதனை சாவடியில் போலீசார் உயர் கோபுரம் அமைத்து கண்காணித்து வருகிறார்கள். இந்த வழியே செல்லும் அனைத்து வாகனங்களுமே தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

Tags:    

Similar News