செய்திகள்
ஆன்லைன் வர்த்தகம்

திருச்சியில் ஆன்லைன் வர்த்தகம் படுஜோர்

Published On 2020-04-23 12:09 GMT   |   Update On 2020-04-23 12:09 GMT
திருச்சியில் ஆன்லைன் மூலம் பொதுமக்கள் பலர் தங்களுக்கு தேவையான மளிகை, காய்கறி, பழங்கள் உணவு உள்ளிட்ட பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி வருகின்றனர்.
திருச்சி:

திருச்சியில் ஊரடங்கு உத்தரவால் வீடுகளில் பொதுமக்கள் முடங்கியுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மாநகராட்சி சார்பில் அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. வாரத்தில் ஏதாவது ஒரு கிழமையில் சென்று அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம். தற்போது மாநகரில் பல்வேறு இடங்களில் அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பலர் மாநகரில் அரசு அனுமதியுடன் திறக்கப்பட்டுள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று தங்களுக்கு தேவையான காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் சூப்பர் மார்க்கெட்டுகளில் சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதம் முடிவடைய உள்ளதால் பொதுமக்கள் அடுத்த மாதத்திற்கான பொருட்களை வாங்க கடைகளில் குவிகின்றனர்.

இது ஒருபுறமிருக்க ஆன்லைன் மூலம் பொதுமக்கள் பலர் தங்களுக்கு தேவையான மளிகை, காய்கறி, பழங்கள் உணவு உள்ளிட்ட பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி வருகின்றனர். முன்பு உணவு மட்டுமே பெரும்பாலான பொதுமக்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி வந்தனர். தற்போது மளிகை காய்கறி உள்ளிட்ட பொருட்களையும் வாங்கி வருகின்றனர். ஆட்டிறைச்சி கூட ஆன்லைன் மூலம் சப்ளை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News