செய்திகள்
நாற்காலியில் அமர்ந்தபடி இறந்து கிடக்கும் பேராசிரியர் கனகராஜ்.

நன்னிலம் அருகே விடுதி அறையில் இறந்து கிடந்த மத்திய பல்கலைக்கழக பேராசிரியர்

Published On 2020-04-22 12:26 GMT   |   Update On 2020-04-22 12:26 GMT
நன்னிலம் அருகே விடுதி அறையில் மர்மமான முறையில் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் இறந்து கிடந்தார். கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பேரளம்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட நீலக்குடி பகுதியில் உள்ள மத்திய பல்கலைகழகத்தில் வணிகவியல் துறையில் துணை பேராசிரியராக பணியாற்றி வந்தவர் கனகராஜ் (வயது 42). ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த கனகராஜ் நீலக்குடியில் மத்திய பல்கலைகழக குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

கடந்த மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதனால் தனது சொந்த ஊருக்கு செல்லமுடியாததால் மத்திய பல்கலைகழக குடியிருப்பிலே தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை முதல் இன்று காலைவரை நீண்ட நேரமாகியும் அவரது அறை திறக்கப்படாதால் சந்தேகம் அடைந்த பக்கத்து அறையில் வசித்து வரும் பேராசிரியர்கள் கனகராஜின் அறைக்கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்கப்படாதால் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது கனகராஜ் நாற்காலியில் அமர்ந்திருந்தநிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நன்னிலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் பேராசிரியர் கனகராஜிற்கு சிறுநீரக கோளாராறு இருந்ததாகவும் அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததாகவும் அதன் காரணமாக இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவரது ரத்தமாதிரி எடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கனகராஜின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஆய்விற்கு பிறகு அவரது உடல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News