செய்திகள்
சுங்கச்சாவடி

சுங்க கட்டண வசூலுக்கு வைகோ-திருமாவளவன் கண்டனம்

Published On 2020-04-21 11:35 GMT   |   Update On 2020-04-21 11:35 GMT
ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நேற்று முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் தொடங்கி இருக்கிறது. இதற்கு வைகோ-திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை:

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நேற்று முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் தொடங்கி இருக்கிறது. இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள 8.50 லட்சம் சரக்கு வாகனங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பது வழிப்பறி போல நடக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடி கட்டணக் கொள்ளை நிலையங்களை நிரந்தரமாக மூட வேண்டும் என்று நாடு முழுவதும் மக்கள் போராட்டங்கள் ஆங்காங்கே வெடித்து வருவதை மத்திய அரசு பொருட்படுத்தவே இல்லை.

கொரோனா தொற்று நோய் மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. எதிர்காலம் பற்றிய கவலை அதிகரித்துள்ள நிலையில், சுங்கச் சாவடி கட்டணம் வசூல், கட்டணம் அதிகரிப்பு என மத்திய அரசு மக்களை வாட்டி வதைப்பதை ஏற்கவே முடியாது. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூல் செய்வதை மத்திய அரசு உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மே3-ந்தேதிவரை பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்படாத நிலையில் அத்தியாவசிய பண்டங்களை ஏற்றிவரும் சரக்கு வண்டிகள் மட்டுமே இப்போது இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இன்று முதல் சுங்கக் கட்டணத்தை உயர்த்திவசூலிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கே வழிவகுக்கும். எனவே, சுங்கக் கட்டண உயர்வை ரத்து செய்வதுடன், மே 3-ந் தேதி வரையில் இந்தியா முழுவதும் சுங்கச்சாவடி வசூலை நிறுத்தி வைக்க வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துகிறோம்.

பேரிடர் காலத்தில் உயிர்காக்கும் கருவிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி. வரியை உடனடியாக ரத்துசெய்வதுடன், குறைந்த விலையில் இவற்றைப் பெறுவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயிர்காக்கும் கருவிகளிலும் வரி வசூலிப்பது என்பது எந்தவொரு மக்கள் நல அரசும் செய்யக்கூடிய காரியம் அல்ல என்பதையும் பிரதமர் மோடிக்கு சுட்டிக்காட்டுகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News