செய்திகள்
சென்னை ஐகோர்ட்

அரசுக்கு தகவல் தெரிவித்துவிட்டு நிவாரணம் வழங்கலாம் - திமுக தொடர்ந்த வழக்கில், ஐகோர்ட் உத்தரவு

Published On 2020-04-17 03:01 GMT   |   Update On 2020-04-17 03:01 GMT
நிவாரண பொருட்களை வழங்குவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக அரசுக்கு, அரசியல்கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் தகவல் தெரிவிக்கவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

நிவாரண பொருட்களை நேரடியாக வழங்கக்கூடாது என்ற அரசின் நிபந்தனை நல்லதாக தெரியவில்லை என்றும் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக அரசுக்கு, அரசியல்கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் தகவல் தெரிவிக்கவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால், உணவு, அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை கிடைக்காமல் பலர் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்கு அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், தனிநபர்கள் ஆகியோர் உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், பொதுமக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியபொருட்களை அரசியல் கட்சியினர், அரசியல் பிரமுகர்கள், தன்னார்வ அமைப்புகள் ஆகியோர் நேரடியாக வழங்கக்கூடாது. மாநகராட்சி கமிஷனர்கள், மாவட்ட கலெக்டர்கள் ஆகியோர் மூலமே வழங்கவேண்டும். இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை செய்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க., சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிற்கு, தமிழக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி வாதாடுகையில் கூறியதாவது:-

‘கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனா வைரசை அழிக்க அரசு பல தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. உணவுப்பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் வழங்கும்போது அதிக அளவில் பொதுமக்கள் கூடுகின்றனர். இதனால் வைரஸ் தொற்று வேகமாக பலருக்கு பரவ வாய்ப்புள்ளது. எனவே, அரசு விதிமுறைகளை வகுத்துள்ளது. இதை அனைவரும் பின்பற்றினால், கொரோனா வைரசை முற்றிலுமாக சமுதாயத்தில் இருந்து அழித்து விடலாம்.

சென்னையில் வெள்ளம் புகுந்தபோதும், இயற்கை பேரிடர் தமிழகத்தில் ஏற்பட்டபோதும், நல்ல எண்ணத்துடன் பொதுமக்களுக்கு உதவி செய்தவர்களை எந்த விதத்திலும் அரசு தடுக்கவில்லை. இப்போது வைரஸ் தொற்று தீவிரமாக பரவாமல் இருக்க, நேரடியாக நிவாரண பொருட்களை வழங்க தடை விதித்து, அதை அதிகாரிகள் மூலம் வழங்க வேண்டும் என்ற சில நடைமுறைகளை அரசு வகுத்துள்ளது. இதில் தவறில்லை’

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

நிவாரணப் பொருட்களை வழங்க அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இதில் எந்த தவறும் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. அதேநேரம், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை நேரடியாக வழங்கக்கூடாது. அதை மாநகராட்சி ஆணையர்கள், மாவட்ட கலெக்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு விதித்துள்ள நிபந்தனைகள் நல்லதாக தெரியவில்லை. அதனால், இவற்றை நேரடியாக வழங்கலாம். அதேநேரம், தற்போது நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில், நிவாரணப் பொருட்கள் வழங்குபவர்களும், பெறுபவர்களும் வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். எனவே, மனுதாரர் அமைப்பான தி.மு.க., மட்டுமல்லாமல், இதேபோன்ற அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், தன்னார்வலர்கள் ஆகியோர் நிவாரண பொருட்கள் வழங்கப்போவது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் 48 மணி நேரத்துக்கு முன்பாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

இதன்படி, நிவாரண பொருட்கள் வழங்கப்படும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும். விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? உணவு பெறுபவர்கள், வழங்குபவர்கள் ஆகியோரது உடல் ஆரோக்கியம் நல்ல நிலையில் உள்ளதா? என்பதை சரி பார்த்து, அனுமதி வழங்கவேண்டும். அதேநேரம், உணவு தயாரிக்கும் இடமும், அவற்றை வழங்கும் இடமும், மாநகராட்சி என்றால் ஒரே மண்டலமாகவும், மாவட்ட அளவில் என்றால், ஒரு போலீஸ் நிலையத்தின் எல்லைக்குள்ளும் இருக்கவேண்டும். இந்த எல்லையை தாண்டியோ, வைரஸ் தொற்று அதிகம் உள்ள பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளிலோ நிவாரணம் வழங்கக்கூடாது.

அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குள் பொருட்களை மக்களுக்கு வழங்கி விடவேண்டும். உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் இடத்தை முன்கூட்டியே கிருமிநாசினி தெளித்து அரசு சுத்தம் செய்யவேண்டும். கூட்டத்தை ஒழுங்குப்படுத்த போலீஸ்காரர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

உணவு, நிவாரணப் பொருட்கள் வழங்க மக்கள் பிரதிநிதியுடன், டிரைவரை சேர்க்காமல் 3 நபர்களை அனுமதிக்கவேண்டும். நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் வாகனத்தில் 3 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது. பொருட்களை வழங்கும்போது இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என்பதை அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தீவிரமாக பின்பற்ற வேண்டும். இதுதொடர்பாக அதிகாரிகள் தகுந்த நிபந்தனைகளை விதிக்கலாம். இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News