செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

கொரோனா பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பாராட்டு

Published On 2020-03-24 05:26 GMT   |   Update On 2020-03-24 05:26 GMT
கொரேனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளுக்கு சுப்ரீம் கோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக சமூக ஆர்வலர் குஞ்சனா சிங் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்களில், நாடு முழுதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்காக அமைக்கப்படும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், நோய்த்தொற்று தொடர்பான பரிசோதனை கூடங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர். மேலும் இந்த நோய்த்தொற்றை தடுப்பதற்கு தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில் நாடு முழுவதும் மையப்படுத்தப்பட்ட மேம்பாட்டு ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறி இருந்தனர்.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தற்போதையை நிலவரத்தை திறமையுடன் சமாளிக்கும் வகையில் அரசாங்கம் எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகள் தங்களுக்கு திருப்தி அளிப்பதாக கூறி மத்திய அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் அரசு திறமையுடன் செயலாற்றி வருவதாகவும், இது அரசியல் கருத்து அல்ல உண்மை என்றும் கூறினார்கள்.



அத்துடன், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளை அரசை விமர்சிப்பவர்களும் தற்போது பாராட்டுகிறார்கள் என்றும் அவர்கள் கூறினார்கள்.

தனிமைப்படுத்தும் மையங்களை அதிகரித்தல் மற்றும் பரிசோதனை மையங்களை நாடு முழுவதும் அதிகப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மத்திய அரசை அணுகுமாறு மனுதாரர்களுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினார்கள். 
Tags:    

Similar News