செய்திகள்
அமைச்சர் செல்லூர் ராஜூ

கோரிப்பாளையம் மேம்பாலத்தால் தேவர் சிலைக்கு பாதிப்பு வராது- செல்லூர் ராஜூ பேட்டி

Published On 2020-02-28 12:09 GMT   |   Update On 2020-02-28 12:09 GMT
கோரிப்பாளையம் மேம்பாலத்தால் தேவர் சிலைக்கு பாதிப்பு இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை:

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜீவாநகரில் ரூ.70 லட்சம் மதிப்பிலான தார் சாலை அமைப்பதற்காக பூமி பூஜை இன்று நடந்தது.

அமைச்சர் செல்லூர் ராஜூ பூமிபூஜையில் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை நகரின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை தந்துள்ளார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1500 கோடி மதிப்பிலான பணிகள் நடந்து வருகிறது. பெரியார் பஸ் நிலையத்தில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டபணி காரணமாக பயணிகளுக்கு 4 இடங்களில் நிழற்குடை மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

காளவாசல் மேம்பால பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. மதுரை நகருக்கு வரும் பிரதான குடிநீர் குழாய் வரும் பகுதி என்பதால் மேம்பால பணி கவனமாக நடந்து வருகிறது.

இதனால் காலதாமதம் ஏற்படவில்லை. டிசம்பருக்குள் முடியவேண்டிய பணி நிர்வாக காரணங்களால் தாமதமாகி உள்ளன. வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் காளவாசல் மேம்பால பணிகள் முடிவடையும்.

கோரிப்பாளையத்தில் அமைக்கப்பட உள்ள மேம்பாலத்தால் தேவர் சிலைக்கு பாதிப்பு ஏற்படும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் தேவர் சிலைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேம்பால பணிகள்நடை பெறும். நில ஆர்ஜித பணிகளில் உள்ள சிக்கல்கள் தீர்வு காணப்பட்டு கோரிப்பாளையத்தில் மேம்பால பணிகள் விரைவில் தொடங்கும்.

40 ஆண்டுகளுக்குப் பின்னர் மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே பெரிய தெப்பக்குளங்களில் இதுவும் ஒன்று. மேலும் 11 மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி பெற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரித்திர சாதனை படைத்துள்ளார்.

மதுரை விரகனூரில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்க திட்ட மிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், பைக்காரா கருப்புசாமி, ஏ.வி.எஸ்.பிரிட்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News