செய்திகள்
பொன் ராதாகிரு‌‌ஷ்ணன்

தி.மு.க. மீதுதான் ரஜினிகாந்த் குற்றம் சொல்லி இருக்கிறார்: பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன்

Published On 2020-02-28 01:54 GMT   |   Update On 2020-02-28 01:54 GMT
மதத்தை வைத்து அரசியல் என்று தி.மு.க. மீதுதான் ரஜினிகாந்த் குற்றம் சொல்லி இருக்கிறார் என்று பா.ஜ.க. முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன் கூறினார்.
சென்னை :

பா.ஜ.க. முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன் சென்னை கமலாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவை முறைப்படுத்தப்பட்ட நாடாக மாற்றுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். ஆனால் நாடு முழுவதும் திட்டமிட்டு போராட்டங்கள் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் தூண்டுதலின் பேரில் நடக்கிறது.

இஸ்லாமிய மக்களும், நாமும் சகோதரர்களாக உள்ளோம். ஆனால் காலத்துக்கு ஏற்ப பிரச்சினைகளை எடுத்து மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை காங்கிரஸ், தி.மு.க. போன்ற கட்சிகள் மேற்கொள்கின்றன. இன்னும் ஒரு பாகிஸ்தான் உருவாக இடம் கொடுக்கக்கூடாது.

தமிழகத்தில் 2021-ம் ஆண்டு ஆட்சிக்கு வர வேண்டும் என்று தி.மு.க. துடிக்கிறது. எனவே முஸ்லிம்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று அவர்கள் சொல்வதை நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு பொன் ராதாகிரு‌‌ஷ்ணன் அளித்த பதில்களும் வருமாறு:-



கேள்வி:- டெல்லி கலவரம் குறித்து மத்திய உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கூறி இருக்கிறாரே?

பதில்:- முஸ்லிம்கள் வசிக்கும் சில இடங்களில் போலீசார், உளவுத்துறை அதிகாரிகள் கூட செல்ல முடியாத நிலை இருக்கிறது. அங்கு யார் குடியுரிமை பெற்று இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எல்லோரும் எல்லா இடங்களுக்கும் செல்லும் நிலையை உருவாக்க வேண்டும். நான் கடந்த 2010-ம் ரத யாத்திரை சென்றேன். அப்போது கீழக்கரையில் என்னை உள்ளே விடவில்லை.

பிரதமராக பதவியேற்றவுடன் நான் 130 கோடி மக்களுக்கு முதல் வேலைக்காரன் என்று நரேந்திர மோடி கூறினார். எனவே இரும்புக்கரம் கொண்டு மக்களை ஒடுக்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. மிகவும் மென்மையாக, நாசுக்காக செயல்படுகிறார்.

கேள்வி:- மதத்தை வைத்து அரசியல் செய்வது சரியான போக்கு அல்ல என்று ரஜினிகாந்த் தெரிவித்து இருக்கிறாரே?

பதில்:- அவர் தெளிவாக தி.மு.க.வைத்தான் அப்படி சொல்லி இருக்கிறார்.

கேள்வி:- தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் எப்போது நியமிக்கப்படுவார்?

பதில்:- விரைவில் நியமிக்கப்படுவார்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.
Tags:    

Similar News