செய்திகள்
திருமாவளவன் எம்பி பேசிய காட்சி.

70 வயது வரை நடித்தவர்கள் அரசியலுக்கு வர துடிக்கிறார்கள்- ரஜினி மீது திருமாவளவன் தாக்கு

Published On 2020-02-23 10:13 GMT   |   Update On 2020-02-23 11:03 GMT
70 வயது வரை நடித்தவர்கள் அதிகாரத்திற்கு வர விரும்பும் போது விடுதலை சிறுத்தைகள் கட்சி வரக்கூடாதா? என்று திருமாவளவன் பேசியுள்ளார்.

திருச்சி:

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், என்.பி.ஆர்., என்.ஆர்.சி., திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் பேரணி திருச்சியில் நடைபெற்றது. இப்பேரணியை அக்கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., தொடங்கிவைத்தார். ரவிக்குமார் எம்.பி., உள்பட சுமார் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருச்சி பஞ்சப்பூரில் இருந்து தொடங்கிய பேரணி கிராப்பட்டி போலீஸ் குடியிருப்பு அருகே நிறைவு பெற்றது.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேடு ஆகியவை இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஆபத்தல்ல. அனைத்து மக்களுக்கும் ஆபத்தானது. ஆதார் உள்ளிட்ட 14 வகையான ஆவணங்கள் இருந்தும் இந்திய குடிமகன் என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும். இதற்காக நாட்டு மக்கள் அலைக்கழிக்கப்பட உள்ளனர்.

சமத்துவம், சமூகநீதி, ஆண், பெண் சமம், கல்வி உரிமைகள் ஆகியவற்றை வலியுறுத்தும் அரசியலமைப்பு சட்டத்தை அடியோடு மாற்றியமைக்க திட்டமிட்டு அதற்கேற்ப செயல்படுகின்றனர். அரசியலமைப்பு சட்டத்தால்தான் இந்திராகாந்தி, ஜெயலலிதா உள்ளிட்டோர் ஆட்சியில் அமர்ந்தனர். மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் சுதந்திரமாக ஜனநாயக உரிமைக்காக போராட முடிகிறது. எனவே அம்பேத்கர், பெரியாரின் எண்ணத்தை பிரதிபலிக்கும் அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ.க.சீர்குலைக்க பார்க்கிறது.

இது போன்ற திட்டங்களை ஒரு போதும் தமிழகத்தில் வரவிடமாட்டோம். கூட்டணி தர்மத்துக்காக குடியுரிமை சட்டத்துக்கு முதல்வர் பழனிச்சாமி வக்காலத்து வாங்குகிறார். ஆபத்தான சட்டத்தில் இருந்து தேசத்தை பாதுகாக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும்.

குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்டவைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரகாஷ் அம்பேத்கர் தலைமையில் மார்ச் 4-ந்தேதி புதுடெல்லியில் நடைபெற உள்ள போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும்.


தாழ்த்தப்பட்டவர்கள் நீதிபதி ஆவது யாரும் தந்த பிச்சை அல்ல. அரசியலமைப்பு சட்டம் தந்த உரிமை. கோ‌ஷம் போடும் கும்பலாக இருப்போம் என கனவு காணாதீர்கள். 70 வயது வரை நடித்தவர்கள் அதிகாரத்திற்கு வர விரும்பும் போது விடுதலை சிறுத்தைகள் கட்சி வரக்கூடாதா? கோட்டையில் ஒரு நாள் கொடியேற்றுவோம். வர விருக்கும் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கும் என்றார்.

இதைத்தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக திருமாவளவன் நிருபர்களிடம் கூறுகையில், ஊடகங்கள், தலித் நீதிபதிகள் தொடர்பாக தி.மு.க.வின் ஆர்.எஸ்.பாரதி பேசியதில் எனக்கு உடன்பாடில்லை. அவரது பேச்சு அதிர்ச்சியையும், மனவேதனையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அவர் மன்னிப்பு கூறி விட்டதால் அந்த வி‌ஷயத்தை இனி கிளற வேண்டாம். காவிரி-டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதற்காக அ.தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ள சட்டம் மக்களை ஏமாற்றும் நாடகம் என்றார். 

Tags:    

Similar News