செய்திகள்
விபத்தில் சிக்கிய கார் நொறுங்கி கிடப்பதை படத்தில் காணலாம்.

கரூர் அருகே கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து தாய்-மகள் உள்பட 3 பேர் பலி

Published On 2020-02-14 06:15 GMT   |   Update On 2020-02-14 06:15 GMT
கரூர் அருகே கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து தாய்-மகள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர்:

கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் தனது மனைவி திரிபுர சுந்தரி (வயது 57) மற்றும் மாமியார் சாவித்ரி (78) ஆகியோருடன் கரூர் அருகே நெரூரில் உள்ள பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் மற்றும் சதாசிவ பிரமேந்திராள் கோவிலுக்கு இன்று அதிகாலை காரில் வந்தனர்.

காரை சங்கரே ஓட்டி வந்தார். சாமி தரிசனத்தை முடித்து விட்டு மீண்டும் அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர். கரூர் மற்றும் ஈரோடு மாவட்ட எல்லையான வெள்ளக்கோவில் அருகே உள்ள குருக்கத்தி என்ற பகுதியில் அவர்களது கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த வழியாக எதிரே சென்னியப்பன் (82) என்பவர் மொபட்டில் வந்தார். அந்த சமயம் கார் டயர் திடீரென வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த சாலையில் தாறுமாறாக ஓடியது.

மேலும் எதிரே சென்னியப்பன் வந்த மொபட் மீது மோதியதோடு அவரையும் இழுத்துக்கொண்டு சில மீட்டர் தூரம் வரை சென்றது. இறுதியில் அந்த பகுதியில் இருந்த தடுப்புச்சுவர் இல்லாத கிணற்றுக்குள் பாய்ந்தது.

இந்த கோர விபத்தில் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த திரிபுரசுந்தரி, சாவித்ரி மற்றும் மொபட்டில் வந்த சென்னியப்பன் ஆகிய 3 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் பலியானவர்களின் உடல்களை போராடி மீட்டனர். மேலும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய சங்கரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்தபோது டிரைவரின் இருக்கைக்கு எதிரே உள்ள ஏர்பேக் செயல்பட்டதால் சங்கர் காயங்களுடன் உயிர் பிழைத்தார்.

இந்த விபத்து குறித்து தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சாலையோரம் உள்ள கிணறுகளை மூட வேண்டும் அல்லது அதற்கு தடுப்புச்சுவர் கட்டவேண்டும் என்று அரசு உத்தரவிட்டும் அஜாக்கிரதை காரணமாக இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு உயிர்ப்பலி நடந்து வருகிறது.

Tags:    

Similar News