செய்திகள்
கோப்பு படம்

விடுதியில் மாணவன் தற்கொலை: அருப்புக்கோட்டை தனியார் பள்ளி மீது வழக்கு

Published On 2020-01-25 14:33 GMT   |   Update On 2020-01-25 14:33 GMT
விடுதியில் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை தனியார் பள்ளி மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்:

ராமநாதபுரம் மாவட்டம், கீழகன்னிச்சேரியை சேர்ந்தவர் நாகநாதன். இவரது மகன் ஹரிஷ்பாபு (வயது 17), விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இதற்காக அங்குள்ள பள்ளி விடுதியிலேயே தங்கி இருந்தார்.

சம்பவத்தன்று ஹரிஷ் பாபு நண்பர்களுடன் விடுதியில் இருந்து வெளியே சென்றதாக தெரிகிறது. இதனை பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ் கண்டித்ததோடு, பெற்றோருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் ஹரிஷ் பாபு விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு திரண்டு மாணவனின் பெற்றோர், உறவினர்கள் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் நடத்தினர். உடனே போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிடையில் மாணவன் தற்கொலை சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்த ராஜ், விடுதிகாப்பாளரும், கணித ஆசிரியருமான ஆறுமுகம் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Tags:    

Similar News