செய்திகள்
முத்தரசன்

எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி உடையாது: முத்தரசன்

Published On 2020-01-18 07:33 GMT   |   Update On 2020-01-18 07:33 GMT
தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகள் இடையே எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் கூட்டணி உடையாது என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
நாகர்கோவில்:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பாரதிய ஜனதா 2-வது முறையாக ஆட்சிக்கு வந்த பின்பும் அதன் கொள்கைகள் எதுவும் மாறவில்லை. தவறான பொருளாதார கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவோம் என்று கூறினார்கள். இப்போது லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்திருப்பது தான் நடந்து உள்ளது.

மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது. பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக சட்டங்களையும், திட்டங்களையும் முரட்டு தனமாக அமல்படுத்த முயற்சிக்கிறது.

சர்வாதிகாரத்தை பயன்படுத்தும் யாரும் வெற்றி பெற்றதில்லை. பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியின் செயல்பாடுகள் பாராட்டும்படியாக இல்லை.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக முதல்-அமைச்சரும், மற்ற அமைச்சர்களும் கூறிவருகிறார்கள். மத்திய அரசும் தமிழகத்திற்கு பாராட்டு சான்றிதழ் கொடுத்துள்ளது.


தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருந்தால் களியக்காவிளையில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை நடந்தது ஏன்? என்பதை விளக்க வேண்டும்.

எஸ்.ஐ. வில்சன் கொலையில் ஒரு கட்சிக்கு தொடர்பு இருப்பதாக முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது சரியல்ல. இஸ்லாமிய பயங்கரவாதம், இந்துத்துவா பயங்கரவாதம் என எந்த பயங்கரவாதத்தையும் இங்கு அனுமதிக்க முடியாது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடந்த உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு நடந்த மறைமுக தேர்தலில் ஆளும் கட்சி ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பல பதவிகளை பிடித்துள்ளது. இது ஜனநாயக படுகொலையாகும்.

தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகள் இடையே எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் கூட்டணி உடையாது. மேலும் வலுப்பெறவே செய்யும். ஒரு பெரிய குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம். அதுபோன்றுதான் இப்போது ஏற்பட்டு உள்ளது.

இப்பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும். கூட்டணி மேலும் பலப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News