செய்திகள்
தீவிபத்தில் சேதமான பர்னிச்சர் பொருட்கள்

பர்னிச்சர் ஷோரூமில் தீவிபத்து - ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

Published On 2020-01-07 10:05 GMT   |   Update On 2020-01-07 10:05 GMT
தஞ்சையில் பர்னிச்சர் ஷோரூமில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை புதிய பஸ்நிலையம் செல்லும் சாலையில் தனியார் மருத்துவமனை எதிரே திருச்சியை சேர்ந்த விஜயசேகரன் என்பவர் பர்னிச்சர் ஷோரூம் நடத்தி வருகிறார். கட்டிடத்தின் மேல்பகுதி வாடிக்கையாளர்கள் ஷோரூமாகவும், கட்டிடத்தின் அடித்தளத்தின் கீழ் குடோனாகவும் பயன்படுத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கடையின் அடித்தளத்தின் கீழ் உள்ள குடோனில் தீப்பிடித்துள்ளது. அதிகாலை நேரம் என்பதால் சாலைகளில் போதிய கூட்டம் இன்றி காணப்பட்டது. இதனால் கடையில் தீப்பிடித்தது வெளியில் தெரியவில்லை. பின்னர் 5 மணியளவில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கியது.

அப்போது பூட்டிக்கிடக்கும் பர்னிச்சர் ஷோரூமின் அடித்தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறுவதை அந்த வழியாக நடந்து சென்ற சிலர் பார்த்துள்ளனர். உடனடியாக தஞ்சை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் கடையின் ஷட்டரை உடைத்து திறந்து பார்த்தபோது அடித்தளத்தின் அறையில் தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்ததை பார்த்தனர். ஆனால் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. இதில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மரத்திலான கட்டில், பீரோ, டீப்பாய், நாற்காலி உள்ளிட்ட சுமார் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமாகியது. மின்கசிவு காரணமாக தீவிபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தஞ்சை தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News