செய்திகள்
அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு - அமைச்சர்கள் குழு ஆலோசனை

Published On 2019-12-18 02:41 GMT   |   Update On 2019-12-18 02:41 GMT
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்க 5 அமைச்சர்கள் அடங்கிய குழு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
சென்னை:

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ‘புகழ்பெற்ற நிறுவனம்’ என்ற அந்தஸ்தை சமீபத்தில் வழங்கியது. இதன்மூலம் அந்த பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்கும்.

ஆனால் சிறப்பு அந்தஸ்து கிடைக்க பெற்றால், பல்கலைக்கழகத்தின் இடஒதுக்கீட்டு கொள்கையில் பிரச்சினை எதுவும் வந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் தமிழக அரசு, அதற்கு ஒப்புதல் அளிக்க சிறிது காலம் எடுத்துக்கொண்டது.

இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதிய தமிழக அரசு, ‘இடஒதுக்கீட்டு கொள்கையில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்’ என்று அதில் தெரிவித்து இருந்தது.

அதன் தொடர்ச்சியாக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. அண்மையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 40-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவின் மேடையில், துணைவேந்தர் சூரப்பா, உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் இதுபற்றி கோரிக்கை விடுத்தார்.

அதே மேடையில் இருந்த பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித்தும் அமைச்சரை அழைத்து பேசினார். இந்த நிலையில் இதுதொடர்பாக உயர்கல்வி துறை செயலாளர் மங்கத்ராம் ஷர்மா ஒரு அரசாணையை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக கடந்த மாதம் 19-ந்தேதி அமைச்சர்கள் கூட்டத்தில் பேசப்பட்டது.

அதில் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவதால், அண்ணா பல்கலைக்கழகத்தின் சட்டம் 1978 மற்றும் புதுசட்டம் திருத்தம் ஆகியவற்றின்படி அண்ணா பல்கலைக்கழகத்தை அண்ணா புகழ்பெற்ற நிறுவனம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் என்று இரண்டாக பிரிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது.



இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்க பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதுதவிர நிதித்துறை (செலவினம்), சட்டத்துறை, உயர்கல்வி துறை செயலாளர்கள் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவதால் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாநில அரசின் இடஒதுக்கீட்டில் எந்த பிரச்சினையும் இருக்காது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் கேட்கப்பட்டது. அதன்படி, கடந்த 4 மற்றும் 12-ந்தேதிகளில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் துணை இயக்குனர், டெல்லி சாஸ்திரிபவன், உயர்கல்வி துறையிடம்(ஐ.சி.ஆர்.பிரிவு) இருந்து கடிதம் வந்துள்ளது.

அதில் ‘பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டாலும், அது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து பின்பற்றப்படும் இடஒதுக்கீடு கொள்கை உள்பட மாநில அரசின் அனைத்து விதிகளும் தொடர்ந்து பொருந்தும்’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் அடங்கிய குழுவினர் எடுக்கும் இறுதி முடிவின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News