search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணா பல்கலைக்கழகம்"

    • நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போசே முக்கிய காரணம்.
    • நேதாஜியின் இந்திய தேசிய படை ஆங்கிலேய ராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது.

    சென்னை:

    சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 127-வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னையில் நேதாஜி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா நடந்தது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

    ஆங்கிலேயர்களிடம் நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை. நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போசே முக்கிய காரணம்.

    நேதாஜியின் இந்திய தேசிய படை ஆங்கிலேய ராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. நேதாஜியே நமது நாட்டின் தேசத்தந்தை.

    வேலு நாச்சியார், வ.உ.சி. போன்றவர்களைப் போல நேதாஜியின் தியாகமும் போற்றப்பட வேண்டும். இந்திய தேசிய காங்கிரசின் போராட்டத்தால் வெளியேறவில்லை என பிரிட்டன் பிரதமர் அட்லி கூறியிருந்தார்.

    இஸ்லாமிய தலைவர்களின் எண்ணப்படி 1947-ம் ஆண்டு நாடு இரண்டாக பிரிந்தது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நேதாஜி பிறந்தநாளையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    "பராக்கிரம தினத்தில், இந்திய தேசிய ராணுவத்திற்கு தலைசிறந்த தலைமையை வழங்கி, ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு, அவர்களின் வலிமைக்கு சவால் விடுத்த மாபெரும் தொலைநோக்கு புரட்சியாளர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு நன்றியுள்ள தேசம் மரியாதை செலுத்துகிறது.

    1946-ம் ஆண்டு பிப்ரவரியில் கடற்படைக் கிளர்ச்சிக்கு வழிவகுத்த சுதந்திரத்துக்கான சீருடை அணிந்த ஆயிரக்கணக்கான இந்திய ஆண்களையும், பெண்களையும் நேதாஜி ஊக்குவித்தார். விமானப்படையில் கிளர்ச்சிகள் மற்றும் ஆங்கிலேயரின் ஆயுதப் படைகளில் உள்ள மற்ற இந்தியர்கள், நாட்டை விட்டு வெளியேறும் கட்டாயத்தை ஆங்கிலேயருக்கு ஏற்படுத்தினார். சுயசார்பு பாரதத்தை உருவாக்குவதில் நமது நாட்டின் இளைஞர்களுக்கு அவர் என்றும் ஊக்க சக்தியாக இருப்பார்."

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. திராவிட மாடலை கவர்னர் ஆர்.என்.ரவி விமர்சித்தார். இதற்கு தி.மு.க. தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில் கவர்னரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார். அதன் பின் சனாதன விவகாரத்தில் மோதல் ஏற்பட்டது.

    இதற்கிடையே நேற்று அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்ட ராமர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

    அப்போது கோவிலில் அடக்கு முறை நிலவுவதாக தெரிவித்தார். இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது.

    இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி, இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை என்றும், நேதாஜியே நாட்டின் தேசத்தந்தை என்றும் பேசியிருப்பது சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெரும் மழை கொட்டித் தீர்த்தது.
    • 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து, அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.

    சென்னை:

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெரும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து, அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.

    இதனால் கடந்த 18, 19-ந்தேதிகளில் இந்த 4 மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் வரும் இணைப்பு கல்லூரிகளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக இந்த வாரம் முழுவதும் நடைபெற இருந்த தேர்வுகளையும் ஒத்திவைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டு இருக்கிறது.

    இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள இணைப்பு கல்லூரிகளுக்கும், நாகர்கோவில் மையத்தில் உள்ள தொலைதூர கல்வித் திட்டத்துக்கும் வருகிற 23-ந்தேதி (சனிக்கிழமை) வரை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாகர்கோவில் மையத்தில் பதிவு செய்திருந்த மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுகிறது.
    • தேர்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்று அறிவிப்பு.

    நெல்லை:

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி கன்னியாகுமரியில் பெய்த வரலாறு காணாத மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் வரும் 23ம் தேதி வரை நடைபெற இருந்த பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது.

    அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் நாகர்கோவில் மையத்தில் பதிவு செய்திருந்த மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுகிறது.

    தேர்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

    • புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு, தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
    • புதிய அட்டவணை https://aucoeexam.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்து.

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் என்ஜினீயரிங் கல்லூரிகளில், இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான நவம்பர்/டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள், டிசம்பர் மாதம் 4-ந்தேதி தொடங்கி, 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், மிச்சாங் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு, தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

    தற்போது, புதிய தேர்வு கால அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் வருகிற டிசம்பர் 11-ந்தேதி முதல் பிப்ரவரி 17-ந்தேதி வரை நடைபெறும். இதற்கான புதிய அட்டவணை https://aucoeexam.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்து.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு வகையான ஆய்வுகள் மூலம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் மழை பாதிப்புக்கான காரணங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
    • 97 சதவீத பகுதிகள் மிச்சாங் புயல் மழையால் பாதிப்பை சந்தித்து உள்ளன.

    சென்னை:

    சென்னை கடலோர பகுதியில் கடந்த 3 மற்றும் 4-ந்தேதிகளில் சுமார் 17 மணி நேரம் மிச்சாங் புயல் நிலை கொண்டிருந்தது. இதன் காரணமாக சுமார் 47 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை நகரம் வரலாறு காணாத மழையை எதிர்கொள்ள நேரிட்டது.

    இடைவிடாத மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இந்தநிலையில் சென்னையில் எந்தெந்த பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டன? எந்தெந்த பகுதிகளில் குறைவான பாதிப்பு ஏற்பட்டது? என்பது பற்றி அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது.

    அந்த ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 30 சதவீத பகுதிகள் மிச்சாங் புயல் மழையால் மிக மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பள்ளிக்கரணை, வேளச்சேரி, பெரும்பாக்கம், தாம்பரம், முடிச்சூர், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையாறு, கோடம்பாக்கம், மாம்பலம் பகுதிகளில் அதிகபட்ச பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. அம்பத்தூர் பகுதிகளில் குறைந்தபட்ச பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் மிக மிக குறைவான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பல்வேறு வகையான ஆய்வுகள் மூலம் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் மழை பாதிப்புக்கான காரணங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

    மழைநீர் கால்வாய்கள் மற்றும் தண்ணீர் வெளியேறும் பகுதிகளில் ஆக்கிரமிப்பு காரணமாகவே மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 சதவீதம் மட்டுமே மழை பாதிப்பில் இருந்து தப்பி உள்ளன.

    97 சதவீத பகுதிகள் மிச்சாங் புயல் மழையால் பாதிப்பை சந்தித்து உள்ளன.

    • நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழைக்கு வாய்ப்பு.
    • தொலைதூரக் கல்வித் திட்டத்தில் நடைபெற இருந்த தேர்வும் ஒத்திவைக்கப்படுகிறது.

    தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக வலுப்பெற உள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்தில் அது புயலாக மாறும். அதாவது நாளை தீவிர புயலாக உருவெடுக்கும். அந்த புயலுக்கு "மிச்சாங்" என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    இதனால், நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், மிச்சாங் புயல் எதிரொலியால் நாளை மற்றும் திங்கட்கிழமை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    இதேபோல், தொலைதூரக் கல்வித் திட்டத்தில் நடைபெற இருந்த தேர்வும் ஒத்திவைக்கப்படுகிறது.

    மேலும், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழகத்திலும் வரும் 4ம் தேதி நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

    • எல்லா பல்கலைக்கழகத்திலும் ஒரே மாதிரி தேர்வு கட்டணம் வசூலிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும்.
    • சிண்டிகேட் குழுவினருக்கு பழைய கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு குறித்து துணைவேந்தர் வேல்ராஜ் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நேற்று சில கல்லூரிகளில் தேர்வு கட்டணம் 50 சதவீதம் உயர்வு என்று மாணவர்கள் கூறியுள்ளார்கள். 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. செலவுகள் அதிகம், தேர்வு தாள்களை திருத்த கட்டணம் அதிகம், இதர செலவுகள் உள்ளது.

    நாட்டின் வளர்ச்சிப்படி பார்த்தால் 10 ஆண்டுகளுக்கு பிறகு கட்டண உயர்வு என்பது 100 சதவீதமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் 9 ஆண்டுகளுக்கு பிறகு 50 சதவீதம் கூட்டியுள்ளோம். ஜனவரி மாதம் முடிவு எடுக்கப்பட்டு மே மாதம் கொடுக்கப்பட்டது. பல கல்லூரிகளில் கட்டணம் வசூலித்து விட்டார்கள்.

    இந்த கட்டண உயர்வு குறித்து அமைச்சருக்கு தெரியாது. அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் 50 சதவீதம் உயர்வு என்று கேள்வி வந்ததால் ஏன் உயர்த்தினீர்கள் என உயர்கல்வித்துறை அமைச்சர் கேட்டார்.

    மேலும் பழைய கட்டணத்தையே இம்முறை வசூலிக்க கூறியுள்ளார். அதனால் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த செமஸ்டரில் இருந்து புதிய தேர்வு கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது மாணவர்கள் கல்லூரிகளில் செலுத்திய கூடுதல் தேர்வு கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

    எல்லா பல்கலைக்கழகத்திலும் ஒரே மாதிரி தேர்வு கட்டணம் வசூலிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும். இது தொடர்பான கூட்டம் விரைவில் நடத்தப்படும்.

    அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரி தேர்வு கட்டணம் உயர்வது சரியாக இருக்கும். சிண்டிகேட் குழுவினருக்கு பழைய கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்வு கட்டணமாக ஒரு தாளுக்கு ரூ.150 பெறப்பட்டு வந்த நிலையில், தற்போது 225 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
    • ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் தேர்வு எழுத வேண்டி உள்ளதால் ரூ. 2,050 கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் 50 சதவீதம் அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    தேர்வு கட்டணமாக ஒரு தாளுக்கு ரூ.150 பெறப்பட்டு வந்த நிலையில், தற்போது 225 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 50 சதவீதம் அதிகமாகும்.

    ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் தேர்வு எழுத வேண்டி உள்ளதால் ரூ. 2,050 கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இறுதியாண்டு மாணவர்கள் ப்ராஜெக்ட் செய்வதற்கு 600 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் 900 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் கேட்டபோது, "வரும் செமஸ்டரில் இந்த கட்டண உயர்வு கிடையாது" எனத் தெரிவித்துள்ளார்.

    • திட்டத்தின்படி அண்ணா பல்கலக்கழகத்தில் பி.இ. பயோ என்ஜினீரிங் சேரும் மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் 3 செமஸ்டர் படிப்பார்கள்.
    • மருத்துவ சாதனங்களை வடிவமைக்கும் போது மனித உடலை நன்கு புரிந்து கொள்ள இது உதவும்.

    சென்னை:

    தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்துடன் இணைந்து பல்துறை பட்டப்படிப்பை அறிமுகப்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

    இந்த திட்டத்தின்படி அண்ணா பல்கலக்கழகத்தில் பி.இ. பயோ என்ஜினீரிங் சேரும் மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் 3 செமஸ்டர் படிப்பார்கள்.

    அவர்கள் உடற் கூறியல், உடலியல், நோயியல் மற்றும் உயிர் வேதியியல் ஆகிய பாடங்களை படிப்பார்கள். இது பொறியாளர்களுக்கு உயிரி சாதனங்கள் மற்றும் ஐ.ஒ.டி. அடிப்படையிலான பயோ சென்சார்களை உருவாக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போதுள்ள பயோ மெடிக்கல் என்ஜினீயர்கள் மற்றும் மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் படிப்புகளுடன் இந்த புதிய படிப்பையும் வழங்கும் பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் துறையை தொடங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டு உள்ளது.

    மருத்துவ கல்லூரியில் படிப்பது பொறியியல் மாணவர்களின் தத்துவார்த்த அறிவை சோதிக்கும் மருத்துவ உபகரணங்களை கொண்டிருப்பதால் அவர்களுக்கு அதிக வெளிப்பாட்டை கொடுக்கும் என்றனர்.

    தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் கே.நாராயணசாமி கூறுகையில், ஒரு பொறியியல் மாணவர் இந்த படிப்பின் மூலம் மருத்துவ கள அறிவை பெறுவார். மருத்துவ கள அறிவு, மருத்துவமனைகளில் மருந்து பொறியாளர்களாக அல்லது உயிரி மருத்துவ பொறியாளர்களாக பணியாற்ற உதவும் என்றார்.

    அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறும்போது, "சிண்டிகேட் அனுமதி பெற்ற பின், இரண்டு பல்கலைக்கழகங்கள் பாடத் திட்டத்தை உருவாக்கும். கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் ஏற்கனவே உள்ள பி.இ. உயிரியல் மருத்துவ பொறியியல் மாணவர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் ஒரு செமஸ்டர் படிக்க அனுமதிக்க இரு பல்கலைக்கழகங்களும் உடன்பாட்டிற்கு வந்தன.

    மருத்துவ சாதனங்களை வடிவமைக்கும் போது மனித உடலை நன்கு புரிந்து கொள்ள இது உதவும். பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் பட்டப்படிப்புக்கு பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளின் இதே போன்ற கூட்டாண்மைகளை உருவாக்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

    • 2024-ம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
    • கடந்த ஆண்டு பட்டியலில் 800-1000 இடங்களுக்குள் இருந்தது.

    புதுடெல்லி:

    உலகளவில் உள்ள முன்னணி உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை இங்கிலாந்தை சேர்ந்த 'டைம்ஸ்' இதழ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு இந்த தரவரிசை பட்டியலில் உலக அளவில் 6-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    சென்னையை சேர்ந்த அண்ணா பல்கலைக்கழகம் 500-600 இடங்களில் இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு பட்டியலில் 800-1000 இடங்களுக்குள் இருந்தது. அதேபோல் கடந்த ஆண்டு 800-1000 இடத்துக்குள் இருந்த கோவையை சேர்ந்த பாரதியார் பல்கலைக்கழகம் தற்போது 600-800 இடங்களில் இடம் பிடித்துள்ளது.

    • வளர்ந்து வரும் பாடப் பிரிவுகளில் திறமையுள்ள முக்கிய பொறியியல் மாணவர்கள், தொழில்நுட்பங்கள் மட்டுமே எதிர்காலத்தில் நிறுவனங்களில் இடம்பெறும்.
    • கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், ஐ.டி.க்கு ஒரு கட்டாய அனுபவ கற்றல் படிப்பை பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    பொறியியல் கல்லூரி மாணவர்களை எதிர்கால தொழில் தேவைகளுக்கு தயார்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு, இன்டர்நெட் ஆப் திங்ஸ், இயந்திர கற்றல், டேட்டா சயின்ஸ், விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற வளர்ந்து வரும் படிப்புகளை அடுத்த செமஸ்டரில் இருந்து அறிமுகப்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டு உள்ளது.

    இத்திட்டத்தின்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் சுமார் 320 இணைப்பு கல்லூரிகளில் 3-ம் ஆண்டு படிக்கும் சிவில் என்ஜினீயரிங் மற்றும் பிற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் 6 மற்றும் 7-வது செமஸ்டரில் ஏதேனும் இரண்டை தேர்வு படிப்புகளாக படிக்க வேண்டும்.

    வளர்ந்து வரும் பாடப் பிரிவுகளில் திறமையுள்ள முக்கிய பொறியியல் மாணவர்கள், தொழில்நுட்பங்கள் மட்டுமே எதிர்காலத்தில் நிறுவனங்களில் இடம்பெறும். தொழில் வல்லுனர்கள் நான் முதல்வர் திட்டத்தின்கீழ் கல்லூரிகளில் உள்ள மாணவர்களுக்கு இந்த படிப்புகளை எடுத்து செல்வார்கள் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    இந்த நடவடிக்கையின் மூலம் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய பிரிவுகளில் படிக்கும் மாணவர்கள் பயன் அடைவார்கள். மேலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், ஐ.டி.க்கு ஒரு கட்டாய அனுபவ கற்றல் படிப்பை பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

    மூன்றாம் ஆண்டில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் பிரிவு மாணவர்கள், திருத்தப்பட்ட பாடத்திட்டத்தின்கீழ் கணினி தொடர்பான கிளைகளில் படிக்கும் மாணவர்கள், டேட்டா சயின்ஸ், புல் ஸ்டேக் டெவலப்மென்ட், கிளவுட் கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி போன்ற வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் உள்ளிட்ட 7 சிறப்புகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

    செயற்கை நுண்ணறிவு, எந்திர கற்றல், அனுபவ கற்றல் படிப்புகளை கொண்டு வருமாறு தொழில் துறைகளை நாங்கள் கேட்டு கொண்டு உள்ளோம். அங்கு மாணவர்கள் வழக்கு ஆய்வுகள், தொழில்துறை சிக்கல்களை தீர்ப்பது, திட்டங்களை செயல்படுத்தல் மூலம் கற்றுக் கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கணினி அறிவியல் மாணவர்களுக்கான திட்ட அடிப்படையிலான அனுபவ கற்றல், ஐ.டி. தயாரிப்பு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை மேம்படுத்தும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில் ஒத்துழைப்பு மையத்தின் முன்னாள் இயக்குனர் கலைச்செல்வன் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 80 கல்லூரிகளை நேரில் ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
    • உள்கட்டமைப்பு வசதியின்றி செயல்படும் கல்லூரிகள் உடனடியாக அவற்றை சரி செய்ய அண்ணா பல்கலைக்கழகம் அறிவுரை வழங்கியுள்ளது.

    தமிழகத்தில் உள்ள 80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்காமல் அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    இதனிடையே 80 கல்லூரிகளை நேரில் ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. உள்கட்டமைப்பு வசதியின்றி செயல்படும் கல்லூரிகள் உடனடியாக அவற்றை சரி செய்ய அண்ணா பல்கலைக்கழகம் அறிவுரை வழங்கியுள்ளது.

    மேலும் மாணவர்கள், பேராசிரியர்கள் எண்ணிக்கை, ஆய்வகங்கள், நூலகம் ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னரே அங்கீகாரம் வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

    ×