செய்திகள்
தற்கொலை முயற்சி

கடனை திருப்பி கேட்டவர் வெட்டி கொலை- போலீஸ் தேடிய வாலிபர் திடீர் தற்கொலை முயற்சி

Published On 2019-12-11 10:20 GMT   |   Update On 2019-12-11 10:20 GMT
வடமதுரை அருகே கடனை திருப்பிக் கேட்ட வாலிபரை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடமதுரை:

திண்டுக்கல் அருகே உள்ள எட்டி குளத்துப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான ஒரு கிணற்றில் வாலிபர் உடல் மிதந்தது. தலை இல்லாமல் கிடந்த அந்த வாலிபர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது தலை 3 நாட்களுக்கு பிறகு நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் உடுமலைப் பேட்டை அருகே உள்ள போடிப்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 30) என தெரிய வந்தது. இவர் திண்டுக்கல் அருகே உள்ள குளத்தூரில் கோண் தயாரிப்பு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

காதல் திருமணம் செய்த இவர் சொந்த தொழில் செய்ய முயன்று வந்துள்ளார். இந்த சூழ்நிலையில்தான் நாகராஜ் திடீரென மாயமானார். எனவே கொலை செய்யப்பட்டவர் நாகராஜாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கூட்டாத்துப் பட்டியில் ஆடு மேய்க்கும் தொழிலாளியான கார்த்திக் கண்ணன் (19) என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், கொலை செய்யப்பட்ட நாகராஜ் மோளப்பாடியூரைச் சேர்ந்த தனது நண்பரான ராஜா (33)என்பவருக்கு ரூ.47 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார். சொந்த தொழில் செய்ய நினைத்த நாகராஜ் அந்த பணத்தை அவரிடம் கேட்டு வந்துள்ளார்.

தொடர்ந்து பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த ராஜா அவரை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக கார்த்திக் கண்ணனையும், உதவிக்கு அழைத்துக் கொண்டார். அதன்படி கடந்த 20 நாட்களுக்கு முன்பு நாகராஜை மது குடிக்க ராஜா அழைத்து வந்தார். 3 பேரும் எட்டிகுளத்துப்பட்டியில் மது குடித்துள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் நாகராஜை அவர்கள் 2 பேரும் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

பின்னர் தலையை அறுத்து ஒரு சாக்கு பையில் கட்டியுள்ளனர். உடலை மட்டும் அங்குள்ள கிணற்றில் வீசி விட்டு தலையை வேறு ஒரு பகுதியில் புதருக்குள் வீசினர். இதனையடுத்து போலீசார் கார்த்திக் கண்ணனை கைது செய்தனர்.

போலீசார் தன்னை கைது செய்ய வருவதை அறிந்ததும் ராஜா வி‌ஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவரையும் கைது செய்து இன்று போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தமுடிவு செய்துள்ளனர். நாகராஜ் கொலை செய்யப்பட்டது கடன் பிரச்சினைக்காகவா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News