செய்திகள்
கொள்ளை நடந்த கோவிலை படத்தில் காணலாம்.

தஞ்சை முருகன் கோவிலில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை

Published On 2019-11-21 13:16 GMT   |   Update On 2019-11-21 13:16 GMT
தஞ்சை கீழவாசலில் உள்ள முருகன் கோவிலில் திருப்பணி உண்டியலில் இருந்த ரூ.1 லட்சத்தை கொள்ளையர்கள் எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சையில் அடிக்கடி திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது. போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும் பூட்டிய வீடுகளில் புகுந்து கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் தஞ்சை கீழவாசலில் உள்ள முருகன் கோவிலில் திருப்பணி உண்டியலில் இருந்த ரூ.1 லட்சத்தை கொள்ளையர்கள் எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை அஞ்சல் காரத் தெருவில் பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இது 100 ஆண்டுகளை கடந்த பழமையான கோவிலாகும். இங்கு நேற்று முன்தினம் பைரவர் ஜெயந்தி விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நேற்று இரவு கோவில் பின்பக்க மதில் சுவர் ஏறிக்குதித்து பைரவர் கையில் இருந்த சூலத்தை எடுத்து கேட் பூட்டை உடைத்து உள்ளனர்.

பின்னர் கோவிலுக்குள் புகுந்து அங்கு வைக்கப்பட்டு இருந்த திருப்பணி உண்டியலை உடைத்து அதில் கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் கோவில் திருப்பணிக்கு செலுத்திய காணிக்கை தொகையை கொள்ளையடித்து சென்று விட்டனர். அதிலிருந்து ரூ.1 லட்சம் வரை கொள்ளை போய் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் கோவில் நிர்வாகிகள் தஞ்சை கிழக்கு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலின் உண்டியல் பணத்தை திருடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

கொள்ளை நடந்த முருகன் கோவிலில் கடந்த 11.9.2008 ஆண்டு கும்பாபிஷேகம் நடந்ததுள்ளது.

இக்கோவிலில் வருகிற 2020-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணி உண்டியல் அதிகாரிகள் அனுமதியுடன் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொள்ளை நடந்தது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Tags:    

Similar News