செய்திகள்
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஜல்லிக்கட்டு போட்டியை காண பிரதமர் மோடிக்கு அழைப்பு- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Published On 2019-11-13 05:43 GMT   |   Update On 2019-11-13 05:43 GMT
அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து வர அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை:

ஜெயலலிதா பேரவை சார்பில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை மக்களுக்கு விளக்கும் வகையில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தொடர் ஜோதி நடைபயணத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஜெயலலிதா பேரவையினர் தொடங்கி உள்ளனர்.

இன்று காலை மதுரை சிந்தாமணியில் இருந்து அரசின் சாதனை விளக்க தொடர் ஜோதி நடைபயணத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த நடைபயணம் 5 நாட்கள் மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் 30 லட்சம் மக்கள் சந்திப்பாக நடைபெற உள்ளது. தொடர் ஜோதி நடைபயணத்தில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்களின் குறைகள் தீர்க்கப்படும். பட்டா வழங்குதல் மற்றும் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும்.

பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் மு.க.ஸ்டாலினுக்கு இந்த பயணத்தின் மூலமாக எங்களது ஆட்சியின் சாதனைகளையும் மக்களுக்கு உண்மைகளை எடுத்துரைப்போம்.

தி.மு.க.வின் பொய்யான முகத்தை தோலுரித்துக் காட்டுவதே எங்களது முதல் கடமை. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படுகிறது.


பிரதமர் நரேந்திர மோடியை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டிற்கு அழைத்து வர அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் 100 சதவீத வெற்றி பெறப்போவது உறுதி. முதலில் சைக்கிள் பேரணி, தற்போது தொடர் ஜோதி நடைபயணம் என மேற்கொண்டுள்ளோம். உள்ளாட்சித்தேர்தல் வருவதையடுத்து மக்களை சந்திப்பதற்கு இது போல ஒரு புது வியூகம் வகுக்கப்படும்.

முதலமைச்சர் ஒரு கருத்து சொன்னால் அது மிகச்சரியானதாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை. நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் சிவாஜி கணேசன் நிலைமை என்று சொன்னதில் உண்மை உள்ளது. இதில் எள்ளளவும் மாற்றமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News