செய்திகள்
கமல்ஹாசன் - முக ஸ்டாலின்

டி.என்.சே‌ஷன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் இரங்கல்

Published On 2019-11-11 05:06 GMT   |   Update On 2019-11-11 05:06 GMT
முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் திடீரென மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டுப் பெரிதும் வேதனையுற்றேன். அவரது மறைவிற்கு தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

டி.என்.சேஷன் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது, முழுமையாகத் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக கம்பீரமாகத் திகழ்ந்தது.

“சுதந்திரமான, நேர்மையான” தேர்தலை நடத்தி, ஜனநாயகத்தின் உறுதிமிக்க பாதுகாவலனாக சேஷன் திகழ்ந்தார்.

பாரபட்சமற்ற முறையில் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆளுங்கட்சியோ-எதிர்கட்சிகளோ, யாருடைய தலையீட்டையும் முற்றிலுமாகத் தவிர்த்து, அனைவருக்கும் தேர்தலில் சம களத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.

அவர், வாக்காளர்களின் நினைவில் மட்டும் நிற்கவில்லை. இந்திய ஜனநாயகத்தின் இரு கண்களிலும் என்றைக்கும் ஒளிவீசிக் கொண்டிருப்பார். டி.என்.சேஷன் நேர்மை, கண்டிப்பு, நடுநிலை ஆகியவற்றுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்.



டி.என்.சேஷன் காட்டிய, “நேர்மையான தன்னாட்சிப் பாதை”, என்றைக்கும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் நிலைத்த- நீடித்த பாதையாக அமைவது, அவருக்கு இந்த நாடு செலுத்தும் மரியாதை, உண்மையான அஞ்சலியாகும்.

சேஷன் மறைவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் சக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும், தேர்தல் ஆணையத்தில் அவரோடு பணியாற்றியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சே‌ஷன் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘தேர்தல் ஆணையத்தின் சக்திவாய்ந்த பாத்திரத்தை பொதுமனிதனின் விவாதத்துக்கு எடுத்து வந்தவர் டி.என்.சே‌ஷன். தைரியம் மற்றும் நம்பிக்கையின் உருவமாக நினைவுக் கூரப்படுபவர் டி.என். சே‌ஷன்’ என்று கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

Tags:    

Similar News