செய்திகள்
கைதான இந்துமதி - மணிவண்ணன்

சேலத்தில் ரூ.1.26 கோடி மோசடி: கணவன்-மனைவி மீண்டும் கைது

Published On 2019-10-29 12:44 GMT   |   Update On 2019-10-29 12:44 GMT
சேலத்தில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு ரூ.1.26 கோடி மோசடி செய்த கணவன்-மனைவி மீண்டும் கைது செய்யப்பட்டனர்.

சேலம்:

சேலம் ரெட்டிப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 38). இவரது மனைவி இந்துமதி (33). இவர்கள் தனது உறவினர்கள் ராம், லட்சுமணன், மாமனார் மாணிக்கம், மாமியார் சரஸ்வதி, பழைய சூரமங்கலத்தை சேர்ந்த அலுவலக ஊழியர் ஈஸ்வரி ஆகியோருடன் இணைந்து ஆர்.எம்.வி. குரூப் ஆப் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கினர்.

இங்கு பணத்தை முதலீடு செய்தால் 100 நாளில் இரு மடங்காக தருவதாகவும், நீண்ட நாள் முதலீட்டுக்கு 25 சதவீத வட்டி தருவதாகவும் மணிவண்ணன் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார்.

மேலும் ஊறுகாய், மசாலா பொருள், சமையல் எண்ணைகள் விற்பனை செய்ய பகுதி வாரியாக வினியோக உரிமை பெற்று தருவதாகவும், அதிக அளவில் பணம் முதலீடு செய்பவர்களை வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்வதாகவும், சொகுசு கார் பரிசாக வழங்குவதாகவும் அறிவித்தார். இதனை நம்பி பலர் முதலீடு செய்தனர்.

முதலில் முதலீடு செய்த சிலருக்கு மட்டும் அறிவித்தபடி சலுகைகளை வழங்கினார். இதனை நம்பிய ஏராளமானோர் கோடி, கோடியாக முதலீடு செய்தனர். இப்படி பல கோடியை வசூலித்த இவர்கள் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்தனர். இதையடுத்து ஏமாந்தவர்கள் மணிவண்ணன் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் மணிவண்ணன், அவரது மனைவி இந்துமதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சேலம் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். மணிவண்ணனிடம் போலீஸ் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தமிழகம் முழுவதும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த நிலையில் அம்மாப்பேட்டை, வித்யாநகரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் சேலம் மாநகர மத்திய பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்தார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

ஆர்.எம்.வி. குரூப் ஆப் கம்பெனியை சேர்ந்த நிர்வாகிகள் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் தினமும் 2000 ரூபாய் என்ற வகையில் 100 நாட்களுக்கு வழங்குவதாக உறுதி அளித்தனர். அதை நம்பி நான் செலுத்திய பணத்துக்கு 10 நாட்களில் 1.80 லட்சம் வழங்கினர்.

நம்பிக்கையை ஏற்படுத்தியதால் பல்வேறு திட்டங்களை என்னிடம் விளக்கினர். அதில் பி.எம்.டபிள்யூ. கார்கள், அதிக மதிப்புள்ள பொருட்களை பரிசாக தருவதாக தெரிவித்தனர். அதை நம்பி ஒரு கோடியே 26 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தினேன்.

பணத்தை பெற்றுக் கொண்ட பின் அவர்கள் அளித்த உறுதி மொழியின் படி எதையும் தராததோடு பணத்தை திருப்பி கேட்டேன். அவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே அவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விசாரணை நடத்தி மணிவண்ணன், அவரது மனைவி இந்துமதி, அலுவலக ஊழியர்கள் கோவிந்தராஜன், ஈஸ்வரி, ஹரி, ஏஜெண்டுகளாக செயல்பட்ட நாமக்கல் மாவட்டம் ஊஞ்சபாளையத்தை சேர்ந்த சுதாகர், எடப்பாடி மோகன், அதே பகுதியைச் சேர்ந்த மாதையன் ஆகிய 8 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். மேலும் போலீசார் சிறையில் உள்ள மணிவண்ணன், இந்துமதியை மட்டும் இந்த வழக்கில் கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடிவருகின்றனர். 

Tags:    

Similar News