செய்திகள்
விபத்தில் சிக்கிய தனியார் பஸ்- பால் லாரியை படத்தில் காணலாம்.

தேன்கனிக்கோட்டை அருகே தனியார் பஸ் மீது டேங்கர் லாரி மோதி விபத்து

Published On 2019-10-21 15:07 GMT   |   Update On 2019-10-21 15:11 GMT
தேன்கனிக்கோட்டை அருகே தனியார் பஸ் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 25 பேர் படுகாயம் அடைந்தனர்.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. 

தேன்கனிக்கோட்டை தேர்ப்பேட்டையைச் சேர்ந்த டிரைவர் ரியாஷ் என்பவர் தனியார் பஸ்சை ஓட்டி சென்றார். அந்த தனியார் பஸ் தேன்கனிக்கோட்டையை அடுத்த பென்னக்கூர் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது அங்கு பங்கில் இருந்து வெளியே வந்த பால் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரி ஒன்று பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பயணிகள் 25 பேர் படுகாயம் அடைந்தனர். சிலருக்கு தலையில் பலத்த காயமடைந்ததால் வலியால் அலறி துடித்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஒரு சிலரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் பயணிகள் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

இதுகுறித்து தகவலறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பால் ஏற்றி செல்லும் டேங்கர் லாரி டீசலை நிரப்பி விட்டு பெட்ரோல் பங்கில் இருந்து  எந்தவித சிக்கனலும் அறிவிக்காமல் ரோட்டிற்கு வேகமாக வந்தது. இதனை எதிர்பாராத தனியார் பஸ் டிரைவர் டேங்கர் லாரி மீது மோதாமல் இருக்க வண்டியை திருப்பியுள்ளார். அப்போது பஸ் ரோட்டோரம் இருந்த மரத்தின் மீது மோதி நின்றது.

மேலும் டேங்கர் லாரியும் அந்த பஸ் மீது மோதியது. இதில் 25 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த பகுதியின் அருகே வேகத்தடை  இருந்ததால் தனியார் பஸ் மெதுவாக வந்தது. இதனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயங்களுடன் உயிர் தப்பினர் என்று போலீசார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான தனியார் பஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திகிரி அருகே உள்ள ஒரு பள்ளத்தில் சிக்கியது. அப்போது பயணிகள் காயத்துடன் உயிர் தப்பினர். இந்த நிலையில் மீண்டும் அதே  தனியார் பஸ் விபத்தில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News