செய்திகள்
சீமான்

தமிழ் பாடம் நீக்கப்பட்டதற்கு ஆண்ட கட்சிகளே காரணம்- சீமான் பேட்டி

Published On 2019-09-29 10:23 GMT   |   Update On 2019-09-29 10:23 GMT
தமிழ் பாடம் நீக்கப்பட்டதற்கு ஆண்ட கட்சிகளே காரணம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

பீளமேடு:

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது-

டி.என்.பி.எஸ்.சி. -2 தமிழ் பாடம் நீக்கம் குறித்து முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறும்போது இதற்கு தமிழகத்தை ஆண்ட கட்சிகள் தான் முழு காரணம் என கூறி உள்ளார். அவர் சொன்னது சரிதான். அவர் கருத்திற்கு நான் உடன்படுகிறேன்.

இதற்கு காரணம் தமிழ் மொழியில் இருந்து பலர் வெளியேறி விட்டனர். தமிழை வளர்க்க இதுவரை ஆண்ட கட்சிகள் என்ன நடவடிக்கை எடுத்தது?

கோவை தடாகம் பகுதியில் மண் எடுக்க 75 அடி ஆழத்திற்கு மட்டுமே தமிழக அரசு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் அதற்கு மேலும் தனியார் நிறுவனத்தினர் பலர் மண் எடுத்து வருகிறார்கள்.

இதற்கு மாநில அரசு உடந்தையாக உள்ளதோ என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

விளை நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதால் அரசுக்கு ரூ. 42 கோடி நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது.

விளை நிலங்கள் வழியாக மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு கட்ட பேராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

விளை நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்காமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக மின் கம்பி மூலம் மின்சாரத்தை கொண்டு செல்லலாம். இதனால் அரசுக்கு ரூ. 42 கோடி வருமானம் மிச்சமாகும்.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஈத்தேன் போன்ற திட்டங்களால் விளை நிலங்கள் அழிந்து விடும். இந்த திட்டங்கள் மூலம் தமிழகத்தை எத்தியோப்பியா, நைஜீரியா போல் உருவாக்க முயற்சி நடக்கிறது.

வெளிநாடுகளில் மீத்தேன், ஈத்தேன் போன்றவைகள் காய்கறி கழிவுகள், குப்பைகள் மூலம் எடுத்து வருகிறார்கள். நம் நாட்டில் அரசு ஏன் இப்படி எடுக்கவில்லை.


ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என நடிகர் சிரஞ்சீவி கூறி உள்ளார். அரசியலில் பண பலம் தான் ஜெயிக்கும் என்பதால் நண்பர்கள் என்ற முறையில் சிரஞ்சீவி அவ்வாறு கூறி உள்ளார். அவரது கருத்து சரிதான். அதனை நான் ஏற்கிறேன்.

கட்-அவுட் விழுந்து பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ பலியானது கண்டனத்துக்கு உரியது. இதற்கு ஆளும் அரசு கடுமையான கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.

அ.தி.மு.க. - தி.மு.க. கட்சிகள் கட்-அவுட் பழக்கத்திற்கு முன்னோடியாக இருந்து வருகிறது. மத்திய அரசின் வெளியுறவு கொள்கை மாறாத வரையில் இலங்கை தமிழர்களுக்கு எந்த வித நன்மையும் ஏற்படாது.

தமிழகத்தில் இடைத் தேர்தலில் போட்டியிடுகிறோம். இரு திராவிட கட்சிகளும் கோடிகளை கொட்டி தேர்தலை சந்திக்கிறது. நாங்கள் கொள்கைகளை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News